நிலத்தை அபகரித்துவிட்டு: 99 வயது முதியவரை வீட்டைவிட்டு விரட்டியடித்த மகன் மீது நடவடிக்கை

திண்டுக்கல் அருகே 99 வயது முதியவரின் நிலத்தை அபகரித்து வீட்டைவிட்டு விரட்டியடித்த மகன் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது.

Update: 2018-12-10 22:00 GMT
திண்டுக்கல், 

‘பெத்த மனம் பித்து; பிள்ளை மனம் கல்’ என்ற பழமொழி இந்த காலகட்டத்தில் பல குடும்பங்களில் நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது.

பிள்ளைகளை வளர்க்க பல பெற்றோர் செய்யும் தியாகங்களுக்கு ஈடாக எதுவும் இருக்க முடியாது. அந்த மாதிரி பெற்றோர் பிற்காலத்தில் பிள்ளைகளால் வஞ்சிக்கப்படுவதே மிகவும் கொடுமையான விஷயம். தற்போது பெற்றோரிடம் நிலம், வீடுகளை அபகரித்துக்கொண்டு உணவு கொடுக்காமல் அடித்து சித்ரவதை செய்வது அதிகரித்துக் கொண்டு வருகிறது.

அந்த வகையில் திண்டுக்கல்லில் ஒரு முதியவர் தனது மகன் நிலத்தை அபகரித்துக் கொண்டு அடித்து விரட்டியதாக கலெக்டரிடம் ஒரு புகார் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

திண்டுக்கல் அருகே உள்ள கருதனம்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் (99 வயது). இவர் தனது மகளுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் டி.ஜி.வினயிடம் ஒரு மனு கொடுத்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எனக்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். எனது மனைவி இறந்துவிட்டார். இதையடுத்து, 2-வது மகனுடன் எனது வீட்டில் வசித்து வந்தேன். இதற்கிடையே, அவர் எனது வீட்டை தனக்கு எழுதி தருமாறு கூறினார்.

அதன்பேரில் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்று எழுதி கொடுத்தேன். அப்போது, என்னை ஏமாற்றி எனது பெயரில் இருந்த 1 ஏக்கர் 15 சென்ட் நிலத்தையும் எழுதி வாங்கிக் கொண்டார். பின்னர், அவருடைய மனைவியின் தூண்டுதலின்பேரில் எனக்கு உணவு தராமல் வீட்டைவிட்டு வெளியேற்றினார்.

இதையடுத்து, அவருக்கு எழுதி கொடுத்த நிலத்தின் பத்திரப் பதிவை ரத்து செய்யக்கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அதில் எனக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. தற்போது, எனது நிலத்தின் பத்திரம் அவரிடம் தான் உள்ளது. அதனை கேட்க சென்றபோது அடித்து உதைத்தார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், எனது நிலத்தை மீட்டுதர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்