சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு நடனமாடியபடி மனு கொடுக்க வந்த நரிக்குறவர்களால் பரபரப்பு போலீசாருடன் கடும் வாக்குவாதம்

சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு நடனமாடியபடி மனு கொடுக்க வந்த நரிக்குறவர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-12-10 23:30 GMT
சேலம்,

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள வீரகனூர் பகுதியை சேர்ந்த நரிக்குறவர்கள் தங்களின் கோரிக்கைகள் குறித்து மனு கொடுப்பதற்காக சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயில் முன்பு ஆடி, பாடி நடனமாடியபடி மனு அளித்திட அலுவலகத்திற்குள் உள்ளே செல்ல முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பிற்கு நின்ற போலீசார், நரிக்குறவர்களை கலெக்டர் அலுவலகத்துக்கு உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்தனர். உடனே அவர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். பின்னர் அவர்களை ஒவ்வொருவராக உள்ளே சென்று மனு கொடுக்குமாறு போலீசார் அனுமதித்தனர். பின்னர் அவர்கள் கோரிக்கை மனுவை தனித்தனியாக சென்று அளித்து விட்டு திரும்பினர்.

இதுகுறித்து நரிக்குறவர்கள் கூறியதாவது:-

எங்களுக்கு கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு குடியிருப்பதற்காக வீரகனூர் பகுதியில் அரசு சார்பில் நிலம் ஒதுக்கப்பட்டது. இந்த நிலத்தை பெற்ற நரிக்குறவர்கள் சிலர் நாடோடியாக பல இடங்களுக்கு சென்று விட்டு, மீண்டும் இந்த பகுதிக்கு திரும்பினர். அப்போது, அந்த நிலங்களின் ஒரு பகுதியை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகிறார்கள்.

மேலும் அந்த பகுதியில் குடிநீர் வசதி, சாலை வசதி, மின்வசதி உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. அதே நேரத்தில் இங்கு மின்வசதி இல்லாத காரணத்தால் பாம்பு கடித்து 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்டு, நரிக்குறவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கிட வேண்டும்.

மேலும் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், வீடுகள் கட்டி தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வீரகனூர் பகுதிக்கு வரும் தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து மனு கொடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி பெற்று தர வேண்டும். இல்லையென்றால் விரைவில் சேலம் மாவட்டத்தில் உள்ள நரிக்குறவர்களை ஒன்றிணைத்து கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

மேலும் செய்திகள்