ஓவேலியில் சாலைகளை சீரமைக்கக்கோரி: ஆர்ப்பாட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு

ஓவேலியில் சாலைகளை சீரமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.

Update: 2018-12-09 21:30 GMT
கூடலூர்,

கூடலூர் பகுதியில் ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. இதனால் பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டு, சாலைகள் சேதம் அடைந்தன. ஓவேலி பேரூராட்சி கிளன்வன்ஸ் பகுதியில் இருந்து பெரியசோலைக்கு செல்லும் சாலை மற்றும் காந்திநகர் சந்திப்பு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. இதேபோல் பார்வுட் எஸ்டேட் பகுதியில் சாலையில் விரிசல் விழுந்தது. தற்போது கூடலூர் பகுதியில் மழைக்காலம் முடிவடைந்து விட்டது.

எனவே சேதம் அடைந்த சாலைகளை புதுப்பிக்க வேண்டும், மண் சரிந்த இடங்களில் தடுப்பு சுவர்களை கட்ட வேண்டும் என பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து ஓவேலி பகுதி மக்கள் கூறியதாவது:-

ஓவேலி சோதனைச்சாவடி முதல் சீபுரம் வரை மழையால் சேதம் அடைந்த சாலை சீரமைக்கப்படவில்லை. சூண்டி முதல் காந்திநகர் மற்றும் பெரியசோலை, ஆரோட்டுப்பாறை பகுதியில் உள்ள சாலைகளின் இருபுறமும் புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனை அகற்ற வேண்டும் என பலமுறை வலியுறுத்தப்பட்டது. சாலை பணிக்கு நியமிக்கப்பட்ட பணியாளர்களை சம்பந்தப்பட்ட துறையினர் வேறு பணிக்கு அமர்த்தி வருகின்றனர். இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கிடையில் சாலைகள் சீரமைக்கப்படாததை கண்டித்து கூடலூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு ஓவேலி பகுதி மக்களை திரட்டி தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் போலீசார் அனுமதி வழங்கவில்லை. அதற்கு பதிலாக கூடலூர் புதிய பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி வழங்கினர். இதனை தொடர்ந்து இன்று(திங்கட்கிழமை) தி.மு.க. சார்பில் காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்க வேண்டும், விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூடலூர் தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

மேலும் செய்திகள்