உல்லாஸ்நகரில் தாதா சுரேஷ் புஜாரி கூட்டாளி கைது செல்வந்தர்கள் குறித்து தகவல் கொடுத்து வந்தவர்
உல்லாஸ்நகரில், மிரட்டி பணம் பறிப்பதற்காக செல்வந்தர்கள் குறித்து தாதா சுரேஷ் புஜாரிக்கு தகவல் கொடுத்து வந்த அவரது கூட்டாளியை போலீசார் கைது செய்தனர்.
அம்பர்நாத்,
உல்லாஸ்நகரில், மிரட்டி பணம் பறிப்பதற்காக செல்வந்தர்கள் குறித்து தாதா சுரேஷ் புஜாரிக்கு தகவல் கொடுத்து வந்த அவரது கூட்டாளியை போலீசார் கைது செய்தனர்.
பணம் கேட்டு மிரட்டல்
தானே மாவட்டம் உல்லாஸ்நகர் பகுதியை சேர்ந்த வியாபாரிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போனில் அழைப்பு வந்தது. இதில் பேசிய தாதா சுரேஷ் புஜாரி உடனடியாக ரூ.50 லட்சம் தரவேண்டும் என்றும், இல்லையெனில் உன்னுடைய குடும்பத்தை கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடக்பாடா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கைது
இந்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் உல்லாஸ்நகரை சேர்ந்த வீடியோ கேம் சென்டர் நடத்தி வரும் மிர்ச்சு சர்மா (வயது51) என்பவர் தாதா சுரேஷ் புஜாரியின் கூட்டாளி என்பது தெரியவந்தது. மேலும் அவர் தான் மிரட்டி பணம் பறிப்பதற்காக கட்டுமான அதிபர்கள், தொழில் அதிபர்கள் என செல்வந்தர்கள் பற்றிய விவரங்களை திரட்டி, தாதா சுரேஷ் புஜாரிக்கு கொண்டு சேர்த்ததையும் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு அவரை வருகிற 13-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.