‘மாவட்ட தலைநகரங்களில் விளையாட்டு பயிற்சி மையம் அமைக்கப்படும்’ - ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கிவாசுதேவ் உறுதி
தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் விளையாட்டு பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கிவாசுதேவ் கூறினார்.
ஈரோடு,
ஈஷா கிராம புத்துணர்வு இயக்கம் சார்பில் ஈஷா கிராமோத்சவ விளையாட்டு போட்டிகள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்றன. இதற்கான இறுதிபோட்டிகள் ஈரோடு டெக்ஸ்வேலி வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கிவாசுதேவ் கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
நம் நாட்டில் பல தலைமுறைகளாக ஆட்டம், பாட்டம் கொண்டாட்டங்கள் இருந்து வந்தது. கிராமப்புறங்களில் கலாசாரமாக உழவு எடுக்கும் போதும், விதைக்கும் போதும், களை எடுக்கும்போதும் பாட்டு பாடி கொண்டாடினோம். ஆனால் அந்த நிலை மாறி தற்போது வாழ்க்கையை சுமையாக மாற்றிக்கொண்டோம். மீண்டும் பழைய கலை, கலாசாரம், விளையாட்டுகளை கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தில் ஈஷா அறக்கட்டளை செயல்பட்டு வருகின்றது.
1990-ம் ஆண்டுகளில் சர்வதேச அளவில் பதக்கம் பெற்ற தமிழக வீரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அதன் பிறகு படிப்படியாக குறைந்துவிட்டது. விளையாட்டை ஊக்கப்படுத்த ஈஷா மையம், அரசுடன் சேர்ந்து விளையாட்டு பயிற்சி மையத்தை ஏற்படுத்த உள்ளது. அதன் ஒரு பகுதியாக சர்வதேச விளையாட்டு வீரர்களை உருவாக்கும் வகையில் ஈஷா விளையாட்டு அகாடமி விரைவில் தொடங்கப்பட உள்ளது.
முக்கியமான ஒரு செயலை செயல்படுத்த வேண்டும் என்றால் சீரியசாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் ஒரு செயலை செயல்படுத்த வேண்டும் என்றால் மனிதன் ஆனந்தமாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் உடல், மனம், மூளை சுறுசுறுப்பாக இருக்கும். அதற்கு அடிப்படையானது விளையாட்டாகும்.
தற்போது நம்மிடம் விளையாட்டு என்பது இல்லை. நமது கலாசாரத்தை திரும்ப கொண்டு வரும் வகையில் கடந்த 14 ஆண்டுகளாக ஈஷா மையம் சார்பில் கிராமோத்சவ திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவில் தமிழகத்தை சேர்ந்த 40 ஆயிரம் வீரர் - வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர். பெண்கள் பழைய காலத்தில் வெளியே வந்து விளையாடுவது கிடையாது. ஆனால் தற்போது பெண்கள் வெளியே வந்து விளையாடுகின்றனர். இது ஒரு புரட்சியாகும்.
நம் நாட்டில் பல விதமான காரணங்களால் பெண்கள் தானாக சிந்திக்கும் தன்மையை இழந்துவிட்டனர். சுதந்திர இந்தியாவில் ஆண், பெண், சாதி, மதம் இவைகளை கடந்து நாம் அனைவரும் முழுமையான வாழ்க்கையை வாழ வேண்டும்.
எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகளுக்கு ஒருவர் போட்டியிட்டால் அவர்கள் எந்த சாதி என்று நாம் பார்க்கிறோம். ஆனால் விளையாட்டு வீரர்களின் சாதி, மதத்தை நாம் பார்ப்பது இல்லை. விளையாட்டு ஒன்று தான் சாதி, மதங்களை கடந்து நிற்கிறது.
ஆந்திராவில் அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டு பயிற்சி மையம் செயல்படுகின்றன. ஆனால் தமிழகத்தில் அது போன்ற நிலை இல்லை. தமிழகத்திலும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் விளையாட்டு பயிற்சி மையம் அமைக்கப்படும். அதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகின்றது.
இந்ததிட்ட அறிக்கை 2 மாதத்தில் தமிழக அரசிடம் வழங்கப்படும். இது நிறைவேறினால் தமிழகம் விளையாட்டு மாநிலமாக மாறும். நம் நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 60 சதவீத குழந்தைகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். 150 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் 60 சதவீத துணி தேவையை நம் நாடு தான் பூர்த்தி செய்தது. ஆனால் தற்போது அந்த நிலை மாறி ஜவுளி தொழிலை விட்டு பலர் வெளியேறிவிட்டனர். அடுத்த 8 ஆண்டுகளில் 6 மாநிலங்களில் 700 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம் உள்ளது. தலைக்காவிரியில் இருந்து டெல்டா வரை இந்த மரக்கன்றுகள் நடப்படும்.
விவசாயத்தை விரும்பும் அடுத்த தலைமுறையினர் தற்போது 2 சதவீதமாக மாறிவிட்டனர். இந்த நிலை நீடித்தால் அடுத்த 30 ஆண்டுகளில் உணவு என்பது மிகப்பெரிய பிரச்சினையாக மாறிவிடும்.
விவசாய தொழில் பெருமையானது. எனவே விவசாய தொழில் லாபகாரமானது என்று உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு சத்குரு ஜக்கிவாசுதேவ் கூறினார்.