ஈரோடு மாவட்டத்தில்: மக்கள் நீதிமன்றம் மூலம் 7,921 வழக்குகளுக்கு தீர்வு - பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.24½ கோடி நிவாரணம்
ஈரோடு மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் 7,921 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.24½ கோடி நிவாரணம் வழங்கப்பட்டது.
ஈரோடு,
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நாடு முழுவதும் மாதம்தோறும் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டு வருகிறது. கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கு களை சமரசமாக முடித்து வைக்கும் வகையில் இந்த மக்கள் நீதிமன்றம் நடந்து வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில், மக்கள் நீதிமன்றம் நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டத்தில் நடந்தது. ஈரோடு ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் 9 பகுதிகளிலும், பெருந்துறை, கொடுமுடி, சத்தியமங்கலம், பவானி, கோபிசெட்டிபாளையம் என மொத்தம் 21 இடங்களில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதன் தொடக்க நிகழ்ச்சி ஈரோடு முதன்மை செசன்சு கோர்ட்டில் நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி என்.உமாமகேஸ்வரி கலந்து கொண்டு மக்கள் நீதிமன்ற விசாரணையை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர், கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளை மக்கள் நீதிமன்றம் மூலம் விரைந்து முடிக்கவேண்டும்’ என்றார்.
இதில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மோகன், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் ரவிசங்கர், விபத்து காப்பீட்டு சிறப்பு நீதிபதிகள் ராமகிருஷ்ணன், குணசேகரன் ஆகியோர் பல்வேறு வழக்குகளை விசாரித்தனர். மொத்தம் 12 ஆயிரத்து 788 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில் வங்கி தொடர்பாக வங்கி அதிகாரிகள் மற்றும் கடன் பெற்றவர்கள் இடையேயும், மோட்டார் வாகனங்களில் விபத்து ஏற்பட்டவர்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கும் இடையேயும் விசாரணை நடத்தப்பட்டது.
முடிவில் 7,921 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.24 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 599 நிவாரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் மாஜிஸ்திரேட்டுகள் முருகன், ரங்கராஜ், ஹரிஹரன் மற்றும் வங்கி அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டார்கள்.
இதேபோல் பவானி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ.3கோடியே 85 லட்சம் மதிப்பிலான இழப்பீட்டு தொகை தீர்வு காணப்பட்டு வழங்கப்பட்டது. இதில் குற்றவியல் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு, சிவில் சட்டம் வழக்குகள் மூலம் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு, வங்கி கடன் வழக்குகள் என மொத்தம் 655 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு சமரசம் பேசி முடிக்கப்பட்டது. இதன் மூலம் இழப்பீடு கடன் ரூ.3 லட்சத்து 85 ஆயிரத்து 8-க்கு தீர்வு காணப்பட்டது.
கூடுதல் மாவட்ட நீதிபதி ஆனந்த், ஓய்வு பெற்ற கூடுதல் மாவட்ட நீதிபதி சாத்தப்பிள்ளை, சார்பு நீதிபதி நாகலட்சுமி, உரிமையியல் நீதிபதி சிவக்குமார் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.
மக்கள் நீதிமன்றம் காரணமாக நேற்று பவானி ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்திருந்ததால் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. ரோட்டோரம் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததால் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.