சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையாவின் தோல்வி எனக்கு மரண வேதனையை தந்தது சபாநாயகர் ரமேஷ்குமார் கண்ணீர் பேச்சு

சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையாவின் தோல்வி எனக்கு மரண வேதனையை தந்தது என்று சபாநாயகர் ரமேஷ்குமார் கண்ணீர் மல்க பேசினார்.

Update: 2018-12-09 22:30 GMT
கோலார் தங்கவயல்,

சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையாவின் தோல்வி எனக்கு மரண வேதனையை தந்தது என்று சபாநாயகர் ரமேஷ்குமார் கண்ணீர் மல்க பேசினார்.

கனகதாசர் ஜெயந்தி

கோலார் மாவட்ட குருபா சங்கத்தின் சார்பில், கோலார் டவுன் அரசு ஆஸ்பத்திரி அருகே நேற்று கனகதாசர் ஜெயந்தி விழா நடந்தது. இந்த விழாவில் மாவட்ட பொறுப்பு மந்திரி கிருஷ்ண பைரேகவுடா, கோலார் தொகுதி எம்.பி. கே.எச்.முனியப்பா, சபாநாயகர் ரமேஷ்குமார், சீனிவாசகவுடா எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் முதல்-மந்திரியும், கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சித்தராமையாவும் கலந்து கொண்டார்.

மரண வேதனையை...

இந்த விழாவில் சபாநாயகர் ரமேஷ்குமார் பேசுகையில், தேவராஜ் அர்சுக்கு பிறகு பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினரின் பாதுகாப்பு தலைவராக விளங்கியவர் சித்தராமையா. அவர் 13 முறை மாநிலத்திற்காக பட்ஜெட் தாக்கல் செய்து உள்ளார். அவர் ஒரு சிறந்த தலைவர்.

கடந்த சட்டசபை தேர்தலில் நானும், மேல்-சபை உறுப்பினர் நசீர் அகமதுவும் சித்தராமையாவிடம் கோலார் தொகுதியில் போட்டியிடுமாறு கேட்டு கொண்டோம். ஆனால் அவர் சாமுண்டீஸ்வரி தொகுதியில் நான் போட்டியிட உள்ளதாக மக்களிடம் வாக்கு கொடுத்து விட்டேன். அந்த தொகுதி மக்கள் என்னை வெற்றி பெற செய்வார்கள் என்று கூறினார். ஆனால் அவரை சாமுண்டீஸ்வரி தொகுதி மக்கள் தோற்கடித்து விட்டனர். அவர் சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோல்வி அடைந்தது எனக்கு மரண வேதனையை தந்தது.

இவ்வாறு அவர் பேசினார்.

அவர் பேசிக் கொண்டு இருந்த போது திடீரென கண்ணீர்விட்டு அழுதார். அப்போது மேடையில் அமர்ந்து இருந்த சித்தராமையாவும் கண் கலங்கினார்.

ஆடு பரிசு

இதையடுத்து விழாவில் கலந்து கொண்ட சித்தராமையா உள்பட பலர் பேசினார்கள். இந்த விழாவில் கலந்து கொண்ட சித்தராமையாவுக்கு குருபா சமுதாயத்தின் சார்பில் ஆடு பரிசாக வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்