போக்குவரத்து நெரிசலை குறைக்க: விழுப்புரம் நேரு வீதியில் ஆட்டோக்கள் செல்ல தடை

போக்குவரத்து நெரிசலை குறைக்க விழுப்புரம் நேரு வீதியில் ஆட்டோக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-12-09 22:00 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு முதல் ரெயிலடி அடுத்த தியேட்டர் வரை சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளால் நாள் தோறும் நான்குமுனை சந்திப்பு, நேரு வீதி, காந்திசிலை, ரெயிலடி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே போக்குவரத்து நெரிசலை குறைப்பது தொடர்பாக அனைத்து ஆட்டோ டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் உள்ள போக்குவரத்து பிரிவு போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.

இதற்கு போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் அப்பாண்டைராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

விழுப்புரம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாவட்ட நிர்வாகம், காவல்துறை இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அதன் ஒருபகுதியாக நான்குமுனை சந்திப்பில் இருந்து ரெயிலடி வரை சாலை விரிவாக்கப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளாலும், ஷேர் ஆட்டோக்கள், ஆட்டோக்கள் தாறுமாறாக நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வதாலும் இந்த சாலையில் தினந்தோறும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஆகவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நாளை முதல்(அதாவது இன்று) நேருவீதியில் ஆட்டோக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே புதிய பஸ் நிலையத்தில் இருந்து ரெயிலடி செல்லும் ஷேர் ஆட்டோக்கள், ஆட்டோக்கள் ரங்கநாதன் வீதி, பூங்கா, காந்தி சிலை வழியாக ரெயிலடி செல்ல வேண்டும். அதேபோல் ரெயிலடியில் இருந்து புதிய பஸ் நிலையத்தில் இருந்து காந்திசிலை, திரு வி.க. சாலை, பெருமாள் கோவில், மருத்துவமனை சாலை வழியாக செல்ல வேண்டும்.

இந்த விதிமுறைகளை மீறி செல்லும் ஆட்டோக்களை பறிமுதல் செய்வதோடு, அதனை ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஆட்டோ டிரைவர்கள் விதிமுறைகளை மீறி அதிக பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது. சீருடை அணிந்து ஓட்டுனர் உரிமத்துடன் வாகனத்தை இயக்கவேண்டும். மேலும் வணிகர்கள் பகல் நேரங்களில் தங்களது கடைகள் முன்பு வாகனங்களை நிறுத்தி பொருட்களை ஏற்றுவதோ? இறக்கவோ? கூடாது. மீறினால் சம்பந்தப்பட்ட வணிகர் மீது நடவடிக்கை எடுக்கப் படும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் போக்குவரத்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் மற்றும் விழுப்புரம் நகர ஆட்டோ டிரைவர்கள், உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்