நாளை மறுநாள் கவர்னர் வருகை: எட்டயபுரத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு
எட்டயபுரத்தில் நாளை மறுநாள் நடைபெறும் பாரதியார் பிறந்த நாள் விழாவில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்கிறார்.
எட்டயபுரம்,
எட்டயபுரத்தில் நாளை மறுநாள் நடைபெறும் பாரதியார் பிறந்த நாள் விழாவில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்கிறார். இதனை முன்னிட்டு, எட்டயபுரத்தில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு மேற்கொண்டார்.
நாளை மறுநாள் கவர்னர் வருகை
மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, அவர் பிறந்த ஊரான எட்டயபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் நடைபெறும் விழாவில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
பின்னர் அவர், பாரதியார் பிறந்த இல்லத்தையும் பார்வையிடுகிறார். தொடர்ந்து தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் நடைபெறும் விழாவிலும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்கிறார். இதனை முன்னிட்டு எட்டயபுரத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தலைமையில், போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
கலெக்டர் ஆய்வு
இந்த நிலையில் எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் மணிமண்டபம், பாரதியார் பிறந்த இல்லம் உள்ளிட்ட இடங்களில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர், விழா நடைபெறும் இடங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் அடிப்படை வசதிகளை விரைந்து மேற்கொள்வது குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
எட்டயபுரம் தாசில்தார் வதனாள், நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் உஷா மற்றும் பலர் உடன் இருந்தனர்.