உப்பிலியபுரம் அருகே: பெண் குழந்தை ரூ.1 லட்சத்துக்கு விற்பனை - போலீசார் விசாரணை
உப்பிலியபுரம் அருகே பெண் குழந்தை ரூ.1 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டதாக பெண் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உப்பிலியபுரம்,
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அருகே உள்ள வெங்கடாசலபுரம் கிராமத்தில் வசிப்பவர் சின்னசாமியின் மகள் வெள்ளையம்மாள். இவருடைய அக்காள் ராசம்மாவின் மகன் சுரேஷ், அவருடைய மனைவி பிரேமா ஆகியோர் நாமக்்கல் மாவட்டம், கொல்லிமலை கொளவங்கிராய் அருகேயுள்ள வளப்பூர் நாடு செல்லிப்பட்டி கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
சுரேஷ்- பிரேமா தம்பதிக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் பிரேமா மீண்டும் கர்ப்பமானார். இதையடுத்து வழக்கம்போல் அவர், வெள்ளையம்மாளுடன் சென்று உப்பிலியபுரம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து வந்தார். மேலும் அவரை பிரசவத்திற்காக அதே மருத்துவமனையில் சேர்த்தனர். தங்களுக்கு பெண் குழந்தை பிறந்தால், அதனை வளர்க்க வெள்ளையம்மாளிடம் ஒப்படைப்பதாக சுரேஷ் வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 17-ந் தேதி இரவு, பிரேமாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.
ஆனால் அந்த குழந்தையை வளர்க்க மனமில்லாத சுரேஷ், வாக்குறுதி அளித்தபடி வெள்ளையம்மாளிடம் ஒப்படைக்காமல், வெங்கடாசலபுரம் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் மூலமாக துறையூர் அருகே உள்ள பெருமாள்மலை அடிவாரத்தில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கு ரூ.1 லட்சத்துக்கு குழந்தையை விற்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால், மருத்துவ செலவு செய்து கவனித்துக்கொண்ட வெள்ளையம்மாள் விரக்தியடைந்தார். இது குறித்து அவர் கடந்த மாதம் 24-ந் தேதி உப்பிலியபுரம் போலீஸ் நிலையத்தில், குழந்தையை மீட்டுத்தரக்கோரி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையறிந்த வெங்கடாசலபுரம் கிராமத்தை சேர்ந்த பெண், வெள்ளையம்மாளை ஆள்வைத்து மிரட்டியதாகவும், சிலருடன் கொல்லிமலை சென்று சுரேஷ்-பிரேமா தம்பதியை சந்தித்து, அவர்களை சில ஆவணங்களில் கையெழுத்து போடச்சொல்லி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் பிரேமா கையெழுத்து போட மறுத்ததாக தெரிகிறது. மீண்டும் நேற்று முன்தினம் கொல்லிமலைக்கு சென்று பிரேமாவை மிரட்டியுள்ளனர். மேலும், சுரேஷ் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியதால் பிரேமா ஆவணங்களில் கையெழுத்து போட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து திருச்சி குழந்தைகள் கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரிகளுக்கும் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.