பெங்களூரு அருகே பரிதாபம் கட்டிடம் இடிந்து விழுந்து 2 தொழிலாளிகள் சாவு

பெங்களூரு அருகே கட்டிடம் இடிந்து விழுந்து 2 தொழிலாளிகள் உயிர் இழந்த பரிதாபம் நடந்துள்ளது.

Update: 2018-12-07 22:25 GMT
பெங்களூரு, 

பெங்களூரு அருகே கட்டிடம் இடிந்து விழுந்து 2 தொழிலாளிகள் உயிர் இழந்த பரிதாபம் நடந்துள்ளது.

கட்டிடம் இடிந்து விழுந்தது

பெங்களூரு ராஜாஜிநகரை சேர்ந்தவர் பிரபு. இவருக்கு சொந்தமாக பெங்களூரு புறநகர் பேடரஹள்ளி அருகே கட்டிடம் இருந்தது. அந்த கட்டிடத்தில் சில கடைகள் செயல்பட்டு வந்தன. இந்த நிலையில், பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டிடம் கட்ட பிரபு முடிவு செய்தார். இதையடுத்து, அந்த கட்டிடத்தை இடிக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. அதுபோல, நேற்று முன்தினம் கட்டிடத்தை இடிக்கும் பணியில் திகளரபாளையாவை சேர்ந்த லட்சுமண்(வயது 60), சங்கர்(35), ராய்ச்சூர் மாவட்டத்தை சேர்ந்த மல்லப்பா ஆகிய 3 பேரும் ஈடுபட்டு இருந்தனர்.

தரைத்தளத்தில் நின்று கட்டிடத்தை இடித்து கொண்டிருந்த போது திடீரென்று கட்டிடம் முழுவதும் இடிந்து வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளிகள் 3 பேர் மீதும் விழுந்தது. இதனால் அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடினார்கள். இதுபற்றி அறிந்ததும் பேடரஹள்ளி போலீசார், தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

2 தொழிலாளிகள் சாவு

பின்னர் நீண்ட நேரம் போராடி, 3 தொழிலாளிகளையும் இடிபாடுகளுக்குள் இருந்து தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர். உயிருக்கு போராடிய 3 பேரும் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி லட்சுமண், சங்கர் ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்து விட்டார்கள். மல்லப்பாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கட்டிடத்தின் உரிமையாளர் பிரபு மீது பேடரஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டிடம் இடிந்து 2 தொழிலாளிகள் பலியான சம்பவம் பேடரஹள்ளியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்