புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டபோது சம்பவம் வெடி சத்தம் கேட்டு மிரண்டு ஓடிய கும்கி யானை அசோகா மாயம்

புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டபோது வெடி சத்தம் கேட்டு மிரண்டுகாட்டுக்குள்ஓடிய கும்கி யானை அசோகா மாயமாகிவிட்டது.

Update: 2018-12-05 22:15 GMT
மைசூரு, 

புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டபோது வெடி சத்தம் கேட்டு மிரண்டுகாட்டுக்குள்ஓடிய கும்கி யானை அசோகா மாயமாகிவிட்டது. இதனால் அந்த யானையை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

புலியை பிடிக்கும் பணி

மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகாவில் அந்தசந்தே கிராமம் உள்ளது. இந்த கிராமம் தரகா அணைக்கட்டின் நீர்ப்பிடிப்பு பகுதியை ஒட்டி உள்ளது. இதனால் அணையில் தண்ணீர் குடிக்க வரும் காட்டு யானைகள், சிறுத்தை, புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி அந்தரசந்தே கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புலி ஒன்று கிராமத்திற்குள் புகுந்தது. அந்த புலியானது ஆடு, மாடு, கோழிகளை வேட்டையாடி கொன்று தின்று வந்தது. இதனால் பீதி அடைந்த கிராம மக்கள், தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்கும் படி நாகரஒலே வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். இதைதொடர்ந்து வனத்துறையினர் புலியை பிடிக்கும் நடவடிக்கையில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வந்தனர்.

மிரண்டு ஓடிய கும்கி யானை

இருப்பினும் புலி, வனத்துறையினரிடம் சிக்காமல் இருந்து வருகிறது. இதைதொடர்ந்து புலியை பிடிக்க வனத்துறையினர் கும்கி யானைகளான அர்ஜூனா, அசோகா உள்பட 4 யானைகளை அங்கு வரவழைத்தனர். இந்த கும்கி யானைகள் உதவியுடன் 20-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் புலியை பிடிக்க வனப்பகுதியில் நேற்று முன்தினம் ஈடுபட்டனர்.

அப்போது புதரில் பதுங்கியிருந்த புலியை பிடிக்க பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இந்த வெடி சத்தம் கேட்டு கும்கி யானைகள் மிரண்டன. இதனால் அந்த யானைகளை பாகன்கள் ஆசுவாசப்படுத்தினர். இருப்பினும் அசோகா யானை மட்டும் மிரண்டு காட்டுக்குள் ஓடியது.

தீவிர தேடுதல் வேட்டை

அப்போது அந்த யானை மீது அமர்ந்து இருந்த பாகன், வனத்துறையினர் கீழே விழுந்து லேசான காயமடைந்தனர். ஆனால் அசோகா யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது. புலியை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட கும்கி யானை மிரண்டு ஓடி மாயமாகிவிட்டதால், புலி தேடுதல் வேட்டை உடனே நிறுத்தப்பட்டது.

மேலும் மாயமான கும்கி யானை அசோகாவை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இனப்பெருக்க காலம்

இதுகுறித்து நாகரஒலே புலிகள் காப்பாக கள இயக்குனரும், பாதுகாவலருமான கே.எம்.நாராயணசாமி நிருபர்களிடம் கூறுகையில், ‘மாயமான கும்கி யானை அசோகாவுக்கு மஸ்து அதிகளவில் வந்த வண்ணம் இருந்தது. இதனால் பட்டாசு வெடி சத்தம் கேட்டு அந்த யானை மிரண்டு ஓடி மாயமாகிவிட்டது. அந்த யானையை பிடிக்க தேடுதல் வேட்டையில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்’ என்றார்.

இதுகுறித்து வனஆர்வலர்கள் கூறுகையில், யானைகளுக்கு இனப்பெருக்க காலத்தில் மஸ்து வெளியேறும். அந்த சமயத்தில் ஆண் யானைகள் வழக்கத்துக்கு மாறாக நடந்துகொள்ளும். மேலும் ஆக்ரோஷமாக இருக்கும். இதனால் மஸ்து காலத்தில் கும்கி யானைகளை பணிகளில் ஈடுபடுத்தமாட்டார்கள். ஆனால் மாயமான யானைக்கு மஸ்து வந்தது தெரிந்தும், அதனை வனத்துறையினர் புலியை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தியுள்ளனர். அப்போது வெடி சத்தம் கேட்டு மிரண்டு அந்த யானை ஓடி மாயமாகியுள்ளது என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்