கடலூர் மாவட்டத்தில் உள்ள: தாலுகா அலுவலகங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா - பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்த கோரிக்கை

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-05 22:00 GMT
கடலூர், 

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைபடுத்த வேண்டும். உட்பிரிவு பட்டா மாறுதலில் கிராம நிர்வாக அலுவலர் பரிந்துரையை கட்டாயமாக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயனுள்ள கணினி மற்றும் இணைய தள வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில் அவர்கள் கடந்த 28-ந்தேதி முதல் வேலை பார்க்கும் அனைத்து கிராமங்களுக்கான ஆன்-லைன் சான்றிதழ் பணிகளை முற்றிலும் புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்கள், சாதி, வருமானம், இருப்பிடம் உள்ளிட்ட 20 வகையான சான்றிதழ்களை பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் இரவு நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட போவதாக கிராம நிர்வாக அலுவலர்கள் அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று கடலூர் தாலுகா அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் அமர்ந்து இரவு நேர தர்ணாவில் ஈடுபட்டனர். இதற்கு வட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் ஜெயராமமூர்த்தி, வட்ட இணை செயலாளர் லட்சுமிதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மண்டல செயலாளர் ஜெயராமன், மாவட்ட இணை செயலாளர் சுரேஷ், கூட்டுறவு சிக்கன கடன் சங்க கிராம நிர்வாக அலுவலர் சங்க தலைவர் பாரதி, வட்ட துணை தலைவர் சசிகலா, முன்னாள் வட்ட தலைவர் ராஜன்பாபு, முன்னாள் வட்ட செயலாளர் இளையராஜா, முன்னாள் வட்ட பொருளாளர் தணிகாசலம் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் 25-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதே போல் காட்டுமன்னார்கோவில் தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் இரவு நேர தர்ணாவில் ஈடுபட்டனர். இதில் வட்ட தலைவர் சந்திரசேகர், செயலாளர் எழிலரசன், பொருளாளர் உதயகுமார், மாவட்ட தலைவர் ரவி, குறுவட்ட செயலாளர் சித்ரா உள்பட 25 கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சிதம்பரத்தில் மாவட்ட போராட்ட குழு தலைவர் ராமர் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வட்ட தலைவர் தமிழ்செல்வன், வட்ட செயலாளர் அன்பரசன் வட்ட பொருளாளர் சிவனேசன், வட்ட துணை செயலாளர் பாலமுருகன், அரவிந்த், முத்துலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் நடந்த தர்ணா போராட்டத்தில், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட துணை செயலாளர் சந்திரசேகர், வட்டார தலைவர் வெங்கடாசலம், வட்ட அமைப்பு செயலாளர் கலையரசன் மற்றும் ராமச்சந்திரன், சசிகலா, சர்மிளா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

குறிஞ்சிப்பாடி தாலுகா அலுவலகத்தில் வட்ட தலைவர் பழனிவேல் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், வட்ட செயலாளர் ஜெயசங்கர், பொருளாளர் ரகுராமன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

பண்ருட்டி, ஸ்ரீமுஷ்ணம், வேப்பூர், திட்டக்குடி, புவனகிரி, ஆகிய தாலுகா அலுவலகங்களிலும் கிராம நிர்வாக அலுவலர்கள் இரவு நேர தர்ணாவில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் முழுவதும் 10 தாலுகா அலுவலகங்களில் நடந்த தர்ணாவில் 358 கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றுள்ளதாகவும், நாளை (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் விடுப்பு எடுத்து கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் நடத்தவும், 10-ந்தேதி முதல் கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்றும் மண்டல செயலாளர் ஜெயராமன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்