திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ்: உரம் தயாரிக்க எதிர்ப்பு தெரிவித்த மக்களிடம் பேச்சுவார்த்தை
கம்பத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் உரம் தயாரிக்க எதிர்ப்பு தெரிவித்த மக்களிடம் நகராட்சி கமிஷனர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கம்பம்,
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளில் சேகரிக்கப்படுகிற குப்பைகளில் இருந்து நுண்ணுயிர் உரம் தயாரிக்கப்பட உள்ளது. இதற்காக காமாட்சி கவுடர்நகர், முகைதீன் ஆண்டவர்புரம், நந்தகோபால்சாமி நகர், வாரச்சந்தை, பழைய குப்பைக்கிடங்கு ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதில் கம்பம் 3-வது வார்டு வாரச்சந்தை பகுதியில் குப்பையில் இருந்து உரம் தயாரிக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் நேற்று முன்தினம் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து கம்பம் நகராட்சி கமிஷனர் சங்கரன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று வாரச்சந்தை பகுதிக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கமிஷனர் பேசும்போது, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது திருச்சி, வேலூர், பம்மல், மறைமலைநகர் உள்ளிட்ட இடங்களில் குடியிருப்பு பகுதிகளிலேயே இந்த நுண்ணுயிர் உர செயலாக்க மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் வராது. துர்நாற்றம் வீசாது.
செயலாக்க மையத்தை சுற்றிலும் தோட்டம் அமைக்கப்பட்டு செடிகள் வளர்க்கப்படும். மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு நகரம் தூய்மையாக பராமரிக்கப்படும். பிளாஸ்டிக் போன்ற மக்காத குப்பைகள் தனியாக பிரிக்கப்பட்டு சிமெண்டு தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த மையங்களில் தயாராகும் உரங்கள் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படும் என்றார்.
ஆனால் கமிஷனர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அங்கன்வாடி மையம், குடியிருப்புகள், ஆரம்ப சுகாதார நிலையம், வாரச்சந்தை, பள்ளிக்கூடம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவை உள்ள இடங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்றும், மீறி செயல்படுத்தினால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து நகராட்சி அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.