கலெக்டர் அலுவலகத்தில்: தம்பதி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் பானாம்பட்டு பாதை பகுதியை சேர்ந்தவர் அமிர்தராஜ் (வயது 42). இவரும் இவருடைய மனைவி சங்கீதாவும் (36) நேற்று மதியம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு இவர்கள் இருவரும் திடீரென தாங்கள் கொண்டு வந்திருந்த கேனில் இருந்த மண்எண்ணெயை தங்கள் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து கணவன்-மனைவி இருவரையும் தடுத்து நிறுத்தி அவர்கள் வைத்திருந்த மண்எண்ணெய் கேன், தீப்பெட்டியை பிடுங்கியதோடு அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர்.
அதன் பின்னர் இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அமிர்தராஜ் கூறுகையில், நாங்கள் பானாம்பட்டு பாதையில் ஒருவரது வீட்டின் மாடியில் ரூ.3 லட்சத்திற்கு போக்கியத்திற்கு குடியிருந்தோம். அந்த வீட்டின் உரிமையாளர், எல்.ஐ.சி.யில் ரூ.6 லட்சம் கடன் வாங்கி அதனை கட்ட முடியாத நிலையில் அதுசம்பந்தமாக கோர்ட்டில் வழக்கு நடந்தது.
பின்னர் கோர்ட்டு உத்தரவின்படி அந்த வீட்டை ஜப்தி செய்து ஏலத்திற்கு விட்டதால் அவர் வீட்டை காலி செய்துவிட்டு சென்றார். ஆனால் நாங்கள் கொடுத்திருந்த ரூ.3 லட்சத்தை தரும்படி கேட்டதற்கு அவர் தரவில்லை. எனவே எங்களுக்கு பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி கூறினர்.
இதை கேட்டறிந்த போலீசார், இதுசம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் இதுபோன்ற அசம்பாவித சம்பவத்தில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்தனர். இந்த சம்பவத்தினால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.