கோவை அரசு ஆஸ்பத்திரியில்: பல லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட மருத்துவ கருவிகள் வீணாக கிடக்கும் அவலம் - இறந்தவர்களின் உடலை கொடுப்பதிலும் தாமதம்
கோவை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்காக பல லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட மருத்துவ கருவிகள் யாருக்கும் பயன் இன்றி உள்ளது. மேலும் இறந்தவர்களின் உடலை கொடுப்பதிலும் காலதாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோவை,
கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கோவை மாவட்டம் மட்டுமின்றி திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். மேலும் பலர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு வரும் நோயாளிகளின் நலனுக்காக பல்வேறு சிறப்பு வசதிகள் மற்றும் நவீன கருவிகள் வாங்கப்பட்டு அனைத்து நோய்களுக்கும் உரிய முறையில் சிறப்பான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வந்தது. இதையடுத்து, படுக்கை எண்ணிக்கைகளை இருமடங்காக உயர்த்தவும், நவீன சிகிச்சைகள் அளிக்கவும், அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை பிரிவு மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்தவும் ரூ.50 கோடி செலவில் லிப்ட் வசதிகளுடன் கூடிய 5 அடுக்கு கட்டிடம் கட்டப்பட்டு, ஒருங்கிணைந்த அரசு ஆஸ்பத்திரியாக கடந்த 2015-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் பல கோடி ரூபாய் செலவில் நவீன கருவிகள் வாங்கப்பட்டன. புதிய கருவிகள் வந்ததால் ஏற்கனவே பல லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட கருவிகள் கழற்றி எடுக்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பழைய புறநோயாளிகள் சிகிச்சை மையத்துக்குள் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அந்த கருவிகள் உரிய முறையில் பராமரிக்கப்படாததால் குப்பைபோல் கிடக்கிறது.
இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து செல்லும் பொதுமக்கள் கூறியதாவது:- கோவை அரசு ஆஸ்பத்திரியில் தற்போது அனைத்து நோய்களுக்கும் நவீன முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் பழைய பாரம்பரிய கட்டிடத்தை மட்டும் வைத்துவிட்டு பிற கட்டிடங்களை இடித்துவிட்டு லிப்ட் வசதியுடன் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு நவீன சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இங்குள்ள பழைய கருவிகளை மாற்றி புதிதாக பல்வேறு நவீன கருவிகள் வாங்கப்பட்டன. இதனை தொடர்ந்து பழைய கருவிகள் கழற்றப்பட்டு, ஆஸ்பத்திரி வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. மேலும் ஏராளமான இருக்கைகள் மற்றும் கட்டில்கள் குப்பைபோல் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. இந்த கருவிகளை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி வைத்தால் அங்கு பயன்பெறும். ஆனால் இப்படி யாருக்கும் உபயோகமின்றி வீணாக இருப்பது வேதனையாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுஒருபுறம் இருக்க அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பழைய பிணவறையின் முன்பு உடைந்த கட்டில்கள் உள்ளிட்ட பொருட்கள் போட்டு வைக்கப்பட்டு உள்ளன. இதனால் மழைநீர் அந்த கட்டில்களில் தேங்கி டெங்கு பரப்பும் கொசு உற்பத்தியாகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மேலும் அங்கு ஒரு கட்டிலில் இறந்த ஆண் ஒருவரின் உடல் 3 மணி நேரத்துக்கும் மேலாக கிடப்பதாகவும், இறந்தவர்களின் உடல்களை கொடுப்பதில் காலதாமதம் செய்வதாக நேற்று காலை குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அங்கு இருந்த ஊழியர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
ஆஸ்பத்திரி வளாகத்தில் புறக்காவல் போலீஸ் நிலையம் இருக்கும் இடத்தின் எதிரே பழைய கட்டிடத்தில் பிணவறை உள்ளது. இங்கு தினமும் 10-க்கும் மேற்பட்ட உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. ஒரே நாளில் ஏராளமான உடல்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு வரும்போது, அந்த உடல்களை பிரேத பரிசோதனை செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.
இதனை போக்கும் வகையில் குளிர்பதன வசதியுடன் கூடிய நவீன பிணவறை மட்டுமின்றி, மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு நேரடியாக பிரேத பரிசோதனை குறித்து ஆய்வு செய்யவும், மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியர்கள் ஆய்வு செய்யவும், பிரேத பரிசோதனை குறித்து போலீஸ் விசாரணை நடத்தவும் வசதியாக ரூ.1 கோடியே 82 லட்சம் செலவில் 3 மாடிகட்டிடங்களுடன், ஆஸ்பத்திரி வளாகத்தின் பின்பகுதியில் புதிதாக கட்டப்பட்டு, 2015-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
தற்போது பழைய பிணவறையில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்களின் பாதிப்பால் உயிர் இழப்பவர்களின் உடல்கள் கொண்டுவரப்பட்டு, டாக்டர்களிடம் இறப்புக்கான சான்று பெற்ற பின்னர் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இதில் சிலர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த உடனேயே இறந்துவிடுவார்கள். அவர்களில் போலீஸ் விசாரணை இல்லாதவர்களின் உடலை பழைய பிணவறைக்கு அனுப்பிவைப்பார்கள்.
பின்னர் அவர்களின் உடலை உறவினர்கள் உடனே பெற வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் அந்த உடலில் உயிர் உள்ளதா? என்பதை பார்க்க டாக்டர்கள் வந்து அதற்கான பரிசோதனை செய்து உரிய சான்று வழங்குவார்கள். அதன்பிறகே உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க முடியும். அதுவரை அந்த உடலை பிணவறையின் வெளியே உடல் முழுவதும் துணியால் மூடப்பட்டு வைக்கப்படும். சில நேரங்களில் டாக்டர்கள் வர தாமதம் ஆனால் மட்டுமே சிறிது நேரம் இறந்தவர்களின் உடல்கள் வெளியே இருக்கும். ஆனால் மணிக்கணக்கில் உடல்களை வைக்க மாட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.