திருமணம் ஆன 25 நாளில்: ரஜினி மக்கள் மன்ற முன்னாள் நிர்வாகி தற்கொலை முயற்சி - போலீசார் விசாரணை

திருமணம் ஆன 25 நாளில் ரஜினி மக்கள் மன்ற முன்னாள் நிர்வாகி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து போலீசில் கூறியதாவது:-

Update: 2018-12-04 22:30 GMT
மேட்டுப்பாளையம், 

மேட்டுப்பாளையம் கே.கே.நகரை சேர்ந்தவர் இம்ரான்கான் என்ற பாட்சா (வயது 35). இவர் வீடுகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் பொருத்தும் பணி செய்து வருகிறார். ரஜினி மக்கள் மன்ற மேட்டுப்பாளையம் நகர செயற்குழு உறுப்பினராகவும், அமைதி புயல் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற முன்னாள் தலைவராகவும் பதவி வகித்து வந்தார்.

இவருக்கு கடந்த மாதம் 11-ந்தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து இவர் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார். மேலும் இவரது திருமணத்துக்கு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பலர் வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மனவருத்தம் அடைந்த நிலையில் இருந்தார். இதற்கிடையே ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த மேலும் சிலர் அடுத்தடுத்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர். இதுதொடர்பாக மாவட்ட செயலாளர் கதிர்வேலுவுடன் இம்ரான்கானுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று இம்ரான்கான் எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த நிர்வாகி உள்பட சிலர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் போலீசில் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணம் முடிந்து 25 நாளில் இம்ரான்கான் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்