நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி: மதுரை வைகை கரையின் இருபுறமும் நான்கு வழிச்சாலை, கலெக்டர் ஆய்வு
மதுரை நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் வைகை கரையின் இருபுறமும் நான்கு வழிச்சாலை அமைப்பது குறித்து கலெக்டர் நடராஜன் நேற்று ஆய்வு நடத்தினார்.
மதுரை,
மதுரை மாநகரில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியை சமாளிக்க காளவாசலில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இது தவிர கோரிப்பாளையம், தெற்கு வாசல் சந்திப்பில் மேம்பாலம் கட்டுவதற்கான ஆய்வுப்பணிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் வைகை கரையின் இருபுறமும் உள்ள சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றினால் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம் என்று அதிகாரிகள் அரசுக்கு ஆலோசனை கொடுத்துள்ளனர். அதாவது இந்த நான்குவழிச்சாலை ஆரப்பாளையத்தில் இருந்து விரகனூர் வரை வைகை ஆற்றின் இருபுறமும் அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இதன் மூலம் திண்டுக்கல்லில் இருந்து வாகனங்கள் நகருக்குள் வராமல் ஆற்றின் கரையோரம் வழியாக விருதுநகர், ராமநாதபுரம் நான்குவழிச்சாலையை சென்றடைய முடியும்.
இதற்கான முதல்கட்ட ஆய்வு பணியை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முடித்து உள்ளனர். மேலும் இந்த திட்டம் சாத்தியம் தான் என அரசுக்கும் அவர்கள் அறிக்கை கொடுத்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக கலெக்டர் நடராஜன் இந்த சாலை பணி குறித்து நேற்று ஆய்வு நடத்தினார். அப்போது அவர், அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, நிலம் கையகப்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.
இதன் தொடர்ச்சியாக கலெக்டர் நடராஜன் காளவாசலில் ரூ.54 கோடி செலவில் நடந்து வரும் மேம்பால பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து ரூ.3 கோடி செலவில் செல்லூரில் இருந்து குலமங்கலம் பிரதான சாலைக்கு செல்லும் சர்வீஸ் சாலை அமைய உள்ள இடத்தினை பார்வையிட்டார்.
அதன்பின் கலெக்டர் மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர் பஸ் நிலையத்தில் இருந்து சர்வேயர் காலனி, மூன்றுமாவடி, அய்யர்பங்களா, பனங்காடி, ஆனந்தம் நகர் மற்றும் ஆணையூர் வழியாக கூடல்நகர் வரை ரூ.500 கோடி செலவில் அமைக்க உள்ள சாலை பணிகளை ஆய்வு செய்தார்.
முன்னதாக நேற்று காலை கலெக்டர் பெரியார், காம்பளக்ஸ் மற்றும் ஆரப்பாளையம் பஸ் நிலையங்களில் ஆய்வு நடத்தினார். அப்போது அங்குள்ள பொதுக்கழிப்பறைகளை பார்வையிட்டார். கழிப்பறைகளை சுத்தமாக பராமரிக்காவிட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்தார். தொடர்ந்து கலெக்டர் கூடலழகர் பெருமாள் கோவில் தெப்பகுளம், மாநகராட்சி மேற்கு நுழைவுவாயில் கோட்டைச்சுவர் மற்றும் பூங்காவில் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மதுரை வருவாய் கோட்டாட்சியர் அரவிந்தன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அரசப்பன், உதவி கோட்டப் பொறியாளர்கள் சீத்தாராமன், தங்கப்பாண்டி, மதுரை மேற்கு தாசில்தார் செல்வராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.