தியாகதுருகத்தில் இருந்து வெளிநாட்டிற்கு: அரிசி ஏற்றுமதி செய்ததில் ரூ.35½ லட்சம் மோசடி - வாலிபர் கைது
தியாகதுருகத்தில் இருந்து வெளிநாட்டிற்கு அரிசி ஏற்றுமதி செய்ததில் ரூ.35½ லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்,
சென்னை பல்லாவரம் தர்கா சாலை பகுதியை சேர்ந்தவர் விஜயராமன் (வயது 49). இவர் சென்னையில் இருந்தபடி லைபீரியா நாட்டில் உள்ள ஒரு தனியார் உணவு நிறுவனத்தின் செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரிடம் வெளிநாட்டு நிறுவனத்தினர், இந்தியாவில் இருந்து அரிசி ஏற்றுமதி செய்து தருமாறு கூறினார்கள்.
அதன்பேரில் விஜயராமன், இணையதளத்தில் ஆராய்ந்து பார்த்தபோது விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தை அடுத்த பீளமேடு காட்டுக்கொட்டாய் பகுதியில் ஒரு தனியார் நிறுவனம் அரிசி ஏற்றுமதி செய்வதாக வெளியிட்டிருந்த விளம்பரத்தை பார்த்தார்.
இதையடுத்து அந்த விளம்பரத்தில் கொடுக்கப்பட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு விஜயராமன் பேசினார். அப்போது எதிர்முனையில் பேசிய நபர், தான் அதே கிராமத்தை சேர்ந்த முருகன் (வயது 29) என்றும், அந்த நிறுவனத்தின் ஏற்றுமதியாளராக பணியாற்றி வருவதாகவும், உங்களது நிறுவனத்திற்கு எவ்வளவு டன் அரிசி ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அதற்கு 520 டன் அரிசி தேவைப்படுகிறது என்று விஜயராமன் கூறியுள்ளார். இந்த 520 டன் அரிசியை 17.5.18 முதல் 13.9.18 வரை தேவைக்கேற்ப அனுப்பி வைப்பதாக முருகன், வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதற்காக அந்த நிறுவனத்திடம் இருந்து ரூ.1 கோடியே 35 லட்சத்து 90 ஆயிரத்து 288-ஐ தனது வங்கி கணக்கு மூலம் முருகன் பெற்றுக்கொண்டார்.
அதன் பின்னர் அந்த நிறுவனத்திற்கு 364 டன் அரிசியை மட்டும் முருகன் ஏற்றுமதி செய்தார். மீதமுள்ள 156 டன் அரிசி வெளிநாட்டு நிறுவனத்துக்கு அனுப்பாமலும், அதற்குரிய பணமான ரூ.35 லட்சத்து 50 ஆயிரத்தை திருப்பி ஒப்படைக்காமலும் முருகன் ஏமாற்றி மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விஜயராமன், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்நிலையில் நேற்று கள்ளக்குறிச்சியில் இருந்து முருகன், வெளியூருக்கு தப்பிச்செல்ல இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் போலீசார், கள்ளக்குறிச்சிக்கு விரைந்து சென்று முருகனை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.