குறைதீர்வு கூட்டத்தில் அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

செய்யாறில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-04 22:45 GMT
செய்யாறு,

செய்யாறு வேளாண்மை துறை அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. செய்யாறு உதவி கலெக்டர் அன்னம்மாள் உள்பட பலதுறை உயர் அதிகாரிகள் வராததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அதிகாரிகளை கண்டித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதைத்தொடர்ந்து உதவி கலெக்டர் அன்னம்மாள் மற்றும் துறை அதிகாரிகள் வரும்வரை கூட்டத்திற்கு வெளியில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது விவசாயிகள், பல மாதங்களாகவே விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் உதவி கலெக்டர் கலந்து கொள்வதில்லை. அதனால் மற்ற துறைகளை சார்ந்த முதல்நிலை அதிகாரிகள் பங்கேற்பதில்லை. பல மாதங்களாக தாசில்தார் தலைமையில் கூட்டம் நடத்தப்படுவதால் எங்களின் கோரிக்கைகளுக்கும், புகார்களுக்கும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என குற்றம் சாட்டினர்.

அதைத்தொடர்ந்து விவசாயிகள், உதவி கலெக்டர் அன்னம்மாள் வருகை தந்து, அவரது தலைமையில் கூட்டம் நடத்தி துறைகளின் முதல்நிலை அதிகாரி பங்கேற்ற செய்வதாக உறுதியளிக்கும் வரை கூட்டத்திற்கு வந்துள்ள அதிகாரிகளை கூட்ட அரங்கத்தினை விட்டு வெளியே அனுப்ப மாட்டோம் என்று அதிகாரிகளை முற்றுகையிட்டு சிறைபிடித்தனர்.

பதற்றமான சூழ்நிலையில் பகல் 1.30 மணிக்கு வந்த உதவி கலெக்டர் அன்னம்மாளை கூட்ட அரங்கத்திற்குள் செல்ல விடாமல் அவரை விவசாயிகள் முற்றுகையிட்டு தங்களின் கோரிக்கைகளை தெரிவித்தனர்.

அதற்கு உதவி கலெக்டர் அன்னம்மாள் கூறுகையில், ஒரே நேரத்தில் செய்யாறு, வெம்பாக்கம் தாலுகாவில் விவசாய குறைதீர்வு கூட்டம் நடத்தப்படுவதால் பங்கேற்க முடியவில்லை எனவும், அடுத்த மாதத்தில் நேரத்தினை மாற்றி காலை, மாலை என கூட்டம் நடத்தி அனைத்துத்துறை அதிகாரிகளையும் பங்கேற்க செய்வதாகவும், பங்கேற்காத அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதையடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்