அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் போராட்டம் - நோயாளிகள் அவதி
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நேற்று டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிகிச்சை பெற முடியாமல் புறநோயாளிகள் கடும் அவதியடைந்தனர்.
விழுப்புரம்,
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு முடிவின்படி 4, 9, 13 ஆண்டுகள் பணிபுரிந்த அரசு டாக்டர்களுக்கு உரிய சம்பளம் வழங்க வேண்டும், 13 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு தகுதித்கேற்ற சம்பளம் வழங்க வேண்டும், பயணப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் அனைத்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பினர் புறநோயாளிகளுக்கான சிகிச்சையை மட்டும் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வரும் டாக்டர்கள் நேற்று புறநோயாளிகளுக்கான சிகிச்சையை மட்டும் அளிக்காமல் பணி புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புறநோயாளிகள் பிரிவில் டாக்டர்களின் இருக்கைகள் காலியாக இருந்தது.
டாக்டர்களின் இந்த போராட்டம் காரணமாக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு புறநோயாளிகளாக சிகிச்சை பெற வந்தவர்கள் உரிய சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையை நாடிச்சென்றனர். இதனால் எப்போதும் கூட்டநெரிசல் மிகுந்து காணப்படும் புறநோயாளிகள் பிரிவு நேற்று ஆட்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
ஆனால் அவசர சிகிச்சை, உள்நோயாளிகள் சிகிச்சை, அறுவை சிகிச்சை, மகப்பேறு போன்ற மருத்துவ சிகிச்சைகளை வழக்கம்போல் அரசு டாக்டர்கள் அளித்தனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை புறநோயாளிகள் சிகிச்சை பிரிவை புறக்கணித்து இன்று (அவதாவது நேற்று) 600 டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இனியும் எங்களது கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் வருகிற 8-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை அனைத்து அறுவை சிகிச்சையையும் நிறுத்துவது, 10-ந்தேதி தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபடுவது, 12-ந் தேதி மீண்டும் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவை புறக்கணித்து போராட்டம் செய்வது, 13-ந் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம், 27-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை 3 நாள் தொடர் வேலை நிறுத்தம் செய்வது என முடிவு செய்துள்ளோம் என்றனர்.