மாட்டுவண்டி மணல் குவாரி திறக்கக்கோரி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் -43 பேர் கைது

மாட்டுவண்டி மணல்குவாரி திறக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 43 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-12-03 21:45 GMT
புதுப்பேட்டை,

புதுப்பேட்டை அருகே எனதிரிமங்கலம் தென்பெண்ணையாற்றில் சமீபத்தில் மணல் குவாரியை அரசு திறந்தது. இங்கிருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் அள்ளி, வெளியூர்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குவாரி திறந்தது முதல் அப்பகுதி பொதுமக்கள், அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மாட்டுவண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு அக்கடவல்லியில் உள்ள தென்பெண்ணையாற்றில் உடனடியாக மாட்டுவண்டி மணல் குவாரி திறக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் மாட்டுவண்டி தொழிலாளர்கள் புதுப்பேட்டை மெயின்ரோட்டில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் வீரமணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வம், ஜவ்வாதுஉசேன் ஆகியோர் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இருப்பினும் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட ஒன்றிய செயலாளர் லோகநாதன், மாநிலக்குழு உறுப்பினர் மாதவன், சி.ஐ.டி.யு. மாவட்டக்குழு ரங்கநாதன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஏழுமலை, நகர செயலாளர் உத்திராபதி, கிருஷ்ணன், மாட்டு வண்டி தொழிலாளர்கள் என மொத்தம் 43 பேரை போலீசார் கைது செய்து, புதுப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்