கூட்டுறவு வங்கிகள், வீடுகளில் தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டிய பிரபல கொள்ளையன் கைது

தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகள், வீடுகளில் கைவரிசை காட்டிய பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-12-03 23:00 GMT

காளையார்கோவில்,

தமிழகம் முழுவதும் பல்வேறு கூட்டுறவு வங்கிகள் மற்றும் வீடுகளில் கொள்ளை மற்றும் கொள்ளை முயற்சி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இளையான்குடி அருகே சில மாதங்களுக்கு முன்பு அளவிடங்கான் கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி நடந்தது. இதுகுறித்து சாலைக்கிரமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்தநிலையில் இந்த சம்பவத்தில் 5 பேர் ஈடுபட்டுள்ளது தெரியவந்ததை தொடர்ந்து, போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். அப்போது இந்த வழக்கு தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஒருவர் இளையான்குடி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கும்பலின் தலைவனான சிவகங்கை அருகே உள்ள கோமாளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த அடைக்கன் என்ற வெள்ளைச்சாமி என்பவர் தலைமறைவாக உள்ளது தெரியவந்தது. இவர் தமிழகம் முழுவதும் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

மேலும் காளையார் கோவிலில் நடந்த ஒரு கொள்ளை வழக்கில் வெள்ளைச்சாமி சம்பந்தப்பட்டிருப்பதை தொடர்ந்து அவரை காளையார்கோவில் போலீசாரும் தேடி வந்தனர். இந்தநிலையில் கூட்டுறவு சங்கங்களில் நடந்த கொள்ளை, கொள்ளை முயற்சிக்கு வெள்ளைச்சாமி மூளையாக செயல்பட்டதை அறிந்த தமிழகத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் இருந்து அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

அப்போது சென்னையில் வெள்ளைச்சாமி தலைமறைவாக இருப்பதாக காளையார்கோவில் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதைத்தொடர்ந்து காளையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர்கள் செழியன், பாண்டியன், கார்த்திகேயன் உள்ளிட்ட போலீசார் அதிரடியாக அங்கு சென்று, சென்னை செவ்வாய்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்த வெள்ளைச்சாமியை கைது செய்தனர்.

கைதான கொள்ளை கும்பல் தலைவன் வெள்ளைச்சாமி மீது, மேலூர் மதுராந்தகம், திண்டுக்கல், கோவை, கடலூர், சேலம் திருப்பூர், மதுரை, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் வீடுகளில் நடைபெற்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக 40–க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்