‘தேர்தலுக்கு பயப்படும் அ.தி.மு.க. அரசு’ தங்க தமிழ்செல்வன் பேட்டி

இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தலுக்கு அ.தி.மு.க. அரசு பயப்படுகிறது என்று தங்க தமிழ்செல்வன் கூறினார்.

Update: 2018-12-03 22:45 GMT
திருச்சி,

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில மருத்துவரணி செயல்வீரர்கள் கூட்டம் நேற்று மாலை திருச்சியில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில மருத்துவரணி செயலாளர் முத்தையா தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான், மண்டல பொறுப்பாளர் ரங்கசாமி, திருச்சி மாநகர் மாவட்ட அ.ம.மு.க. செயலாளர் சீனிவாசன், வடக்கு மாவட்ட செயலாளர் மனோகரன் ஆகியோர் பேசினர். சிறப்பு அழைப்பாளராக மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் பங்கேற்றார்.

கூட்டத்தில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்துவதற்காக மாவட்டத்துக்கு 2 குழுக்கள் வீதம் 8 குழுக்கள், அதற்கான மருத்துவரணி டாக்டர்கள் குழு நியமிக்கப்பட்டது.

பின்னர் தங்கதமிழ்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது;-

புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் வருகிற 7-ந் தேதி(வெள்ளிக்கிழமை) முதல் தொடர்ந்து 5 நாட்கள் சிறப்பு மருத்துவ முகாம் நடத்திட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. கர்நாடக அரசு அந்த மாநில மாணவர்களுக்கு கொடுக்க மறுத்த தரமற்ற சைக்கிள்களை வாங்கி கர்நாடக முத்திரை குத்திய லேபில்களைகூட எடுக்காமல், தமிழக அரசு அதிகாரிகள் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்கியது வேதனையானது மட்டுமல்ல. மிகவும் மோசமானதும் கூட.

தி.மு.க. தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்துக்கு எங்களை அழைக்கவில்லை. ஒருவேளை அழைத்திருந்தால் போகக்கூடாது என்று ஒன்றும் இல்லை. இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றை கண்டு பயப்படும் அளவுக்கு அ.தி.மு.க. அரசின் செயல்பாடு உள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க மட்டும் இந்த அரசு தயக்கம் காட்டி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மருத்துவரணி மாநில இணை செயலாளர் முகமது ஹக்கீம், மாநகர் மாவட்ட செயலாளர் சிவமணி, இணை செயலாளர் பிரவீன்ரெல்டன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்