பிதிர்காட்டில்: பழுதடைந்த அங்கன்வாடி மைய கட்டிடம் சீரமைக்கப்படுமா? - பொதுமக்கள் எதிர்பார்ப்பு

பிதிர்காட்டில் பழுதடைந்த அங்கன்வாடி மைய கட்டிடம் சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2018-12-03 21:45 GMT
பந்தலூர்,

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பிதிர்காடு, மானிவயல் ஆகிய பகுதிகளில் ஏராளமான தோட்ட மற்றும் கூலி தொழிலாளர்கள், விவசாயிகள் வசித்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகளை பராமரிக்க பிதிர்காட்டில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த அங்கன்வாடி மைய கட்டிடம் பாழடைந்து கிடக்கிறது. மேற்கூரை உடைந்துள்ளதால், மழைக்காலங்களில் மழைநீர் உள்ளே புகுந்துவிடுகிறது. இதனால் குழந்தைகள் கடுமையாக அவதிப்படுகின்றனர்.

மேலும் நாளுக்குநாள் அங்கன்வாடி கட்டிடம் சேதம் அடைந்து வருகிறது. இது தவிர குழந்தைகள் பயன்படுத்தும் கழிப்பறைகள் பராமரிப்பு இன்றி கிடக்கிறது. இதனால் குழந்தைகள் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

அங்கன்வாடி மைய கட்டிடம் பழுதடைந்து இருப்பதால், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல்நிலை உள்ளது. எனவே குழந்தைகளின் நலன் கருதி அங்கன்வாடி மைய கட்டிடத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.

மேலும் செய்திகள்