தூத்துக்குடி அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு போலீசார் விசாரணை
தூத்துக்குடி அருகே தனியார் தொழிற்சாலை குடியிருப்பு பகுதியில் நீச்சல் குளத்தில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
ஸ்பிக்நகர்,
திருச்சி மலைக்கோட்டை பட்டர் வொர்த் பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ். இவருடைய மகன் சரண் (வயது 22). இவர் தூத்துக்குடி அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தார். தொழிற்சாலைக்கு அருகே உள்ள பணியாளர் குடியிருப்பு பகுதியில் சரண் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் சரண், குடியிருப்பு பகுதியில் உள்ள நீச்சல் குளத்தில் குளிக்க சென்றார். சிறிது நேரம் கழித்து அந்த வழியாக சென்ற மற்ற பணியாளர்கள் சிலர், நீச்சல் குளத்தில் சரண் மூழ்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் உடனடியாக அவர்கள் சரணை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், சரண் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சரண் குளித்துக் கொண்டு இருக்கும் போது, நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.