ஓசூரில் வீடு புகுந்து 56 பவுன் நகைகள் கொள்ளையடித்தவர் கைது
ஓசூரில் வீடு புகுந்து 56 பவுன் நகைகள் கொள்ளையடித்தவரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் அருகே பேடரப்பள்ளி நந்தவன லே-அவுட் பகுதியை சேர்ந்த அமுதேஸ்வரி என்பவரது வீட்டில் கடந்த ஜூன் மாதம் 25-ந் தேதி, இரவு மர்ம ஆசாமிகள் பின்பக்க ஜன்னல் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 56 பவுன் நகைகளை கொள்ளையடித்து தலைமறைவாகி விட்டனர்.
இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வந்தனர். மேலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் உத்தரவின்பேரில், ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி மேற்பார்வையில், சிப்காட் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய சக்திவேல்(வயது 35) என்பவரை போலீசார் நேற்று, ஓசூர் ஜூஜூவாடி சோதனைச் சாவடி அருகே கைது செய்தனர். இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கங்குந்தி கிராமத்தை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் சக்திவேலிடமிருந்து ரூ. 6 லட்சம் மதிப்புள்ள நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். குற்றவாளியை பிடித்து, நகைகளை மீட்ட சிப்காட் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் பாராட்டி, பரிசு வழங்கினார்.