பென்னாகரம் அருகே பொதுவழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் கோரிக்கை

பென்னாகரம் அருகே பொதுவழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2018-12-03 22:45 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று ஆய்வு நடத்தினார். இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு கல்விக்கடன், தொழிற்கடன், இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

இந்த கூட்டத்தில் ஈச்சம்பட்டி பகுதியை சேர்ந்த அருந்ததியின மக்கள் திரண்டு வந்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் இந்த பகுதியில் வசிக்கும் எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்களில் 75 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கப்பட்டது. ஆனால் அதற்குரிய இடத்தை சர்வே செய்து தரப்படவில்லை. இதனால் இலவச வீட்டுமனைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வருகிறார்கள். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி இலவச வீட்டுமனைப்பட்டாவிற்கு ஒதுக்கீடு செய்த நிலத்தை சர்வே செய்து வழங்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

பென்னாகரம் தாலுகா கிருஷ்ணாபுரம் அருகே உள்ள பூனைகுண்டு காட்டுக்கொல்லை கிராமத்தை சேர்ந்த கிராமமக்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் மாணவ-மாணவிகளுடன் வந்து கொடுத்த கோரிக்கை மனுவில், நாங்கள் வசிக்கும் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள பொதுவழிப்பாதையை சில தலைமுறைகளாக பயன்படுத்தி வந்தோம். அந்த பாதை உள்ள இடத்தை ஆக்கிரமித்த சிலர் வழித்தடத்தை அடைத்தனர். இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அந்த பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றினார்கள்.

இந்தநிலையில் மீண்டும் பொதுவழிப்பாதையை ஆக்கிரமித்த சிலர் அந்த வழியாக சென்று வரும் மாணவ-மாணவிகள், பெண்களை தகாத வார்த்தைகளால் பேசியும், கல்வீசி தாக்கியும் தொந்தரவு தருகிறார்கள். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி பொதுவழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றவும், எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

நல்லம்பள்ளி தாலுகா எர்ரபையனஅள்ளியை சேர்ந்த மாற்றுத்திறனாளி தங்கராஜ் கொடுத்த மனுவில், எனக்கு சொந்தமான விவசாய நிலத்தின் ஒருபகுதியில் உயர் மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் எனக்கு சொந்தமான சுமார் 4 ஏக்கர் நிலத்திலும் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே எனது விவசாய நிலத்தின் ஒருபகுதியில் உள்ள உயர் மின்கோபுரத்தை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்று ஆய்வு நடத்திய கலெக்டர் மலர்விழி அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்