செய்யாறில் ‘சீல்’ வைக்கப்பட்ட டாஸ்மாக் கடை யை திறந்து மது விற்பனை பொதுமக்கள் அதிர்ச்சி

செய்யாறில் சீல் வைக்கப்பட்ட ½ மணி நேரத்தில் மீண்டும் டாஸ்மாக் கடை திறந்து மது விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Update: 2018-12-02 23:31 GMT
செய்யாறு,

செய்யாறு டவுன் காய்கறி மார்க்கெட் அருகில் அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் அவசர, அவசரமாக தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்த கடை செயல்படுவதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது அரசியல் பிரமுகர் முன்னிலையில், “இப்பகுதியில் வசிக்கும் உங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது” எனக் கூறி டாஸ்மாக் கடையை திறந்து விற்பனை செய்தனர். கடைக்கு மட்டுமே அனுமதி பெற்ற நிலையில் அருகிலேயே அரசு அனுமதியின்றி பார் நடத்தி மதுபிரியர்கள் அங்கேயே மது அருந்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் பெண்களும், குழந்தைகளும் வெளியே வரவே அச்சப்படுகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 30-ந்தேதி கலால் தாசில்தார் பாபு, புகாரின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் ‘சீல்’ வைக்க உத்தரவிட்டுள்ளதாக கூறி கலால் போலீசாருடன் சென்று டாஸ்மாக் கடை மற்றும் அனுமதியின்றி இயங்கி வந்த பாருக்கு சுமார் இரவு 7.30 மணிக்கு ‘சீல்’ வைத்ததாக தெரிகிறது.

‘சீல்’ வைக்கப்பட்ட ½ மணி நேரத்தில் டாஸ்மாக் கடையின் ‘சீல்’ உடைக்கப்பட்டு மது விற்பனையை மீண்டும் தொடங்கி உள்ளனர். தொடர்ந்து அனுமதியின்றி இயங்கி வந்த பார் மட்டும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடையை ‘சீல்’ வைக்க உத்தரவிட்டது யார்? ½ மணி நேரத்தில் ‘சீல்’ உடைக்க உத்தரவிட்டது யார்? என அப்பகுதியில் உள்ள வியாபாரிகளும், பொதுமக்களும் குழப்பமும், அதிர்ச்சியடைந்துள்ளனர். பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்