பேரையூர் பகுதியில் படைப்புழு தாக்குதலால் பல ஏக்கரில் மக்காச்சோளம் நாசம்; நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

பேரையூர் பகுதியில் படைப்புழு தாக்குதலால் பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்கள் முற்றிலும் நாசமடைந்தன.

Update: 2018-12-02 22:40 GMT

பேரையூர்,

பேரையூர் பகுதியில் கடந்த ஆவணி, புரட்டாசி மாதத்தில் பெய்த மழையால் மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம், பயறு வகை பயிர்கள், குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானிய பயிர்களை சாகுபடி செய்தனர். குறிப்பாக மக்காச்சோளத்தை மட்டும் 8 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர். ஆனால் மக்காச்சோளதை சாகுபடி செய்த 15 நாட்களில் பயிரை படைப்புழுக்கள் ஆக்கிரமித்துக்கொண்டன. முதலில் சேடபட்டி பகுதியில் புழுக்களின் ஆக்கிரமிப்பால் செடிகளில் உள்ள குருத்துகளை புழுக்கள் சாப்பிட்டு சேதப்படுத்தியது. பின்னர் ஒவ்வொரு பகுதியில் உள்ள சோள காட்டை ஆக்கிரமித்து தனது ஆக்டோபஸ் கரத்தை நீள செய்து தற்போது பேரையூர், டி.கல்லுப்பட்டி, அம்மாபட்டி, சொக்கம்பட்டி, பாறைபட்டி மற்றும் பகுதியில் பல்வேறு பகுதிகளில் நன்றாக விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ள மக்காச்சோளத்தில் பரவி உள்ளது.

இந்த பகுதிகளில் மக்காச்சோளம் அறுவடை பணி நடந்து வரும் வேளையில் கதிரில் படைப்புழுக்கள் தாக்குதல் ஏற்பட்டு கதிர்களில் உள்ள விதைகளில் அரிப்பு ஏற்பட்டு முற்றிலும் நாசப்படுத்திவிட்டது. இதை பார்த்த விவசாயிகள் செய்வது அறியாது திகைத்து போய் உள்ளனர்.

இதுகுறித்து அம்மாபட்டி விவசாயி கணேசன் கூறும்போது, மக்காச்சோளத்தை ஆரம்பத்தில் விதைத்த போது நன்றாக முளைத்து வளர்ந்தது. ஆனால் நாளடைவில் செடியில் படைப்புழு படையெடுப்பு காரணமாக மருந்து தெளித்தோம். ஆனால் பலனளிக்காமல் புழுக்களை கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்து நன்றாக விளைந்த கதிர்களிலும் புழுக்கள் தாக்கம் ஏற்பட்டு கதிர்கள் அனைத்தும் வீணாகிப்போய்விட்டது. இந்த கதிர்களை கிராமங்களில் கூவி, கூவி விற்றாலும் 5 பைசாவிற்கு மட்டுமே விற்க முடியும். மேலும் எடுப்பு கூலி கிடைக்காத நிலையில் ஆடு, மாடுகளுக்கு உணவாக அளித்து வருகிறோம் என்றார்.

பேரையூர், டி.கல்லுப்பட்டி, சேடபட்டி ஒன்றியங்களில் சாகுபடி செய்யப்பட மானாவாரி மக்காசோளம் படைப்புழுக்கள் தாக்குதலால் நாசமாகிய நிலையில் விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்து உள்ளனர். எனவே தங்களுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்