‘சிறிய மழைக்கே தாங்கவில்லை’ பல்லாங்குழி சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதி

சிறிய மழைக்கே மதுரை சாலைகள் தாங்கவில்லை. பள்ளங்கள் ஏற்பட்டு பல்லாங்குழியான சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். இந்த சாலைகளை இன்னும் 3 மாதத்திற்கு சீரமைக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

Update: 2018-12-02 22:28 GMT

மதுரை,

இந்தியாவில் உள்ள புராதன நகரங்களில் ஒன்று. தமிழகத்தின் அரசியல் தலைநகரம். தூங்கா நகரம் என்று நாம் பெருமைப்பட்டு கொள்ளும் நம் மதுரை நகரத்தின் சாலைகள், குக்கிராமத்தின் சாலைகளை விட மிக மோசமாக உள்ளது. கடந்த 2 மாதங்களில், அதிகபட்சமாக தொடர்ந்து 2 நாட்கள் பெய்த மழைக்கே, மதுரை சாலைகள் தாங்கவில்லை. இதற்கு முக்கிய காரணம், தரமற்ற சாலைகளை போடுவது தான். சாலைகள் போடும் போது கடைபிடிக்க வேண்டிய எந்த விதிமுறைகளையும் கடைபிடிப்பதில்லை.

மக்களின் வரிப்பணத்தை வீணாக்கி கடனுக்கு போடப்படும் சாலைகளால் பயன் அடைவது ஒரு சிலர் தான். அந்த ஒரு சிலரின் பையை நிரப்புவதற்காக போடப்படும் சாலைகள், பல் இளிக்க தானே செய்யும். புயலுக்கு சாலை தாங்கவில்லை என்றால் கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் சிறிய மழைக்கே தாங்கவில்லை என்பது வருத்தமான வி‌ஷயம். 3 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலைகள் சேதம் ஆனாலும், அது பழைய சாலை எனலாம். ஆனால் 6 மாதத்திற்கு முன்பு போடப்பட்ட சாலைகள் கூட பல் இளித்து விட்டது.

தற்போதைய நிலையில் நகரில் உள்ள 90 சதவீத சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன. அதில் மாநகராட்சி பராமரிக்கும் சாலை மட்டுமின்றி, நெடுஞ்சாலை துறை சாலையும் இதே நிலையில் தான் உள்ளது. சேதம் அடைந்த சாலைகளால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அவர்கள் மதுரை நகர சாலைகளை பல்லாங்குழி சாலைகள் என வர்ணிக்கின்றனர். பல்லாங்குழி சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டு கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

நகரின் முக்கிய சாலைகளான பெரியார் பஸ் நிலைய சாலை, பைபாஸ் சாலை, கோரிப்பாளையம் சாலை, அரசரடி, சிம்மக்கல், மாரட் வீதிகள், மாசி வீதிகள், வெளிவீதிகள், எல்லீஸ் நகர் சாலை, எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலைய சாலை, மகால் சாலை, யானைக்கல், அண்ணா நகர் 80 அடி ரோடு, குருவிக்காரன் சாலை, செல்லூர் சாலை, காமராஜர் சாலை உள்பட மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலைகளில் எல்லாம் ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இவை, மனித உயிர்களை காவு வாங்குவதற்கு வாயை பிளந்து காத்து கொண்டு இருக்கின்றன.

சாலையில் உள்ள பள்ளங்களை மூட சில இடங்களில் செம்மண்ணை கொண்டு வந்து போட்டு மூடினர். ஆனால் ஒருசில நாளில் அந்த செம்மண் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளை மேலும் அவதிக்குள்ளாக்கியது. எனவே எதிர்காலத்தில் இது போன்ற நிலைமை ஏற்படாமல் இருக்க மாநகராட்சி நிர்வாகம் தரமான சாலையை போடுவதற்கு முன்வர வேண்டும். ஏனோ, தானோ என்று இருக்காமல் மக்களின் வரிப்பணத்தில் தான் சாலை போடுகிறோம் என்ற எண்ணத்தில் சட்ட விதிகளை பின்பற்றி தரமான சாலைகளை போட வேண்டும்.

இந்த பல்லாங்குழி சாலைகளை எப்போது சீரமைப்பார்கள் என்பது குறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘அவர் தற்போது மழைக்காலமாக உள்ளது. ஜனவரி மாதம் இறுதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனவே மழை காலம் முடிந்தவுடன், அதன் பின் டெண்டர் விட்டு சாலை சீரமைப்பு பணியை தொடங்க வேண்டும். இன்னும் 3 மாதத்திற்கு சாலையை சீரமைக்க வாய்ப்பு இல்லை‘‘ என்றார்.

மதுரை நகரில் உள்ள எல்லீஸ் நகர், ஏ.வி.மேம்பாலம், சிம்மக்கல், ஒபுளாபடித்துறை, குருவிக்காரன் சாலை, முத்து பாலம், தெற்கு வாசல் பாலம், செல்லூர்–தத்தனேரி ஆகிய அனைத்து மேம்பாலங்களும் படுமோசமான நிலையில் உள்ளன. சாலைகளுக்கு சற்றும் குறைவு இல்லாமல் பாலங்களில் ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. போர்க்கால அடிப்படையில் இந்த பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை ஆகும்.

மதுரை நகரில் உள்ள சாலைகளின் நிலை குறித்து பொதுமக்கள் சிலர் கூறியதாவது:–

நகரில் உள்ள சாலைகளின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. ஆனால் கலெக்டர், மாநகராட்சி கமி‌ஷனர், போலீஸ் கமி‌ஷனர் இல்லம் இருக்கும் சாலைகள் எல்லாம் இப்போதும் சேதமின்றி உள்ளது. அங்கெல்லாம் புயல் வந்தால் கூட அந்த சாலைக்கு ஒன்றும் ஆகாது. ஏனென்றால் அந்த சாலைகளை மிகவும் தரத்துடன் போடுகிறார்கள். நம்மிடம் வரி வாங்கும் பொறுப்பில் இருக்கும் அவர்களுக்கு நல்ல சாலை. வரி கொடுக்கும் நமக்கு பல்லாகுழி சாலைகள். எனவே எதிர்காலத்தில் கலெக்டர், கமி‌ஷனர் இல்லத்தில் அருகே போடும் சாலைகளை போல நமக்கும் சாலைகளை போட வேண்டும். அப்போது மழைக்கு அது சேதமாகாது. மக்களின் வரிப்பணம் காக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்