நூல் விலை உயர வாய்ப்பில்லை; தொழில்துறையினர் மகிழ்ச்சி

நூல் விலையில் மாற்றம் இல்லை என நூற்பாலைகள் அறிவித்துள்ளன. நூல் விலை உயர வாய்ப்பில்லை என்பதால் தொழில்துறையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Update: 2018-12-02 22:45 GMT

திருப்பூர்,

தமிழக நூற்பாலைகள் குஜராத், மராட்டியம், தெலுங்கானா மாநிலத்தில் இருந்தும் பருத்தி கொள்முதல் செய்கின்றன. ஒவ்வொரு சீசன்களிலும் பஞ்சு விலை திடீரென உயர்ந்து விடுகிறது. இதற்கேற்றபடி நூற்பாலைகளும் நூல் விலையை உயர்த்தி விடுகின்றன. பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு அதிகரித்துள்ளது. இதனால் நடப்பு சீசன் தொடங்கும் முன்பே பஞ்சுவிலை உயர தொடங்கிவிட்டது.

பின்னலாடை நகரமான திருப்பூர் மற்றும் தொழில்நகரங்கள் என பல்வேறு பகுதிகளை சேர்ந்த தொழில்துறையினர் அதிகளவில் நூல் கொள்முதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து நூல் விலை உயரும் என திருப்பூர் தொழில்துறையினர் கவலையில் இருந்தனர். இந்நிலையில் நூல் விலை உயர்த்தப்படவில்லை பழைய விலையே தொடரும் என நூற்பாலைகள் அறிவித்துள்ளன. இதனால் தொழில்துறையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரே‌ஷன் கன்வீனர் பிரபு தாமோதரன் கூறியதாவது:–

கடந்த ஆண்டு இதே மாதத்தில் ரூ.38 ஆயிரத்து 500 ஆக இருந்த ஒரு கேண்டி பஞ்சு கொள்முதல் விலை, தற்போது ரூ.45 ஆயிரத்து 500 ஆக அதிகரித்து காணப்படுகிறது. விலை மேலும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் நூல் மில்களுக்கு பஞ்சு கொண்டு வருவதை விவசாயிகள் குறைத்துள்ளனர்.

இதுபோல் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் பேல் குறைவாக, ரூ.1.20 லட்சம் பேல் அளவே நூல் மில்களுக்கு பஞ்சு வருகிறது. தீபாவளி மந்த நிலைக்கு பின் கடந்த சில நாட்களாக நூல் வர்த்தகம் தீவிரமடைந்து வருகிறது. வரத்து குறைவால் பஞ்சு விலை இன்னும் வெளிப்படவில்லை. எனவே தான் நூற்பாலைகள் நூல் விலையை உயர்த்தவில்லை. பஞ்சு விலை இதே நிலையில் தொடர்ந்தால், நூல் விலையும் சீராக இருக்கும். தற்போது நூல் விலையும் உயர வாய்ப்பில்லை. இதனால் தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்