தேசத்தில் உண்மை இல்லை: “ஆசிரியர்கள் கையில் நாட்டின் எதிர்காலம் இருக்கிறது”- ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் பேச்சு
இந்த தேசத்தில் உண்மை இல்லை என்றும், ஆசிரியர்கள் கையில் நாட்டின் எதிர்காலம் இருக்கிறது என்றும் தேனியில் நடந்த விழாவில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் பேசினார்.
தேனி,
தேனியில், திண்ணை மனிதவள மேம்பாட்டு அமைப்பு சார்பில் பல்வேறு துறைகளிலும், சமூக சேவையிலும் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு திண்ணை அமைப்பின் தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். இதில், சென்னை அறிவியல் துணை நகரத்தின் இயக்குனரும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சகாயம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-
டெல்லியில் நடந்த நிகழ்வில் எனக்கு சிறந்த அதிகாரி என்று விருது வழங்கினார்கள். வழக்கமாக நான் விருதுகளை விரும்பாதவன். 30-க்கும் மேற்பட்ட விருதுகளை புறக்கணித்து வந்துள்ளேன். இது, நான் உயர்ந்தவன் என்று காட்டுவதற்காக அல்ல. அது என்னுடைய மனநிலை. எனவே, டெல்லியில் கொடுத்த விருதையும் நான் வாங்கச் செல்லப்போவதில்லை என்று இருந்தேன். அதற்கு நண்பர்கள் சொன்னார்கள், டெல்லி கொடுக்கிறது. வழக்கமாக தமிழர்கள் கேட்பார்கள் கொடுப்பதில்லை. இன்றைக்கு டெல்லி கொடுக்கிறது என்று தெளிவாக புரிந்து வைத்துச் சொன்னார்கள். அதனால், விருதை வாங்கச் சென்றேன்.
இந்த தேசத்தில் ஆற்றல் இருக்கிறது. அறிவு இருக்கிறது. திறமை இருக்கிறது. உண்மை மட்டும் தான் இல்லை என்பதை நாம் உணர்ந்து இருக்கிறோம். ஆசிரியர்களே, பள்ளிக்கூடத்தில் தமிழைச் சொல்லிக் கொடுங்கள். ஆங்கிலத்தை போதியுங்கள். விஞ்ஞானத்தை கற்றுக் கொடுங்கள். கணிதத்தை அழகாக விளக்கிச் சொல்லுங்கள். புவியியலை, வரலாற்றை கற்றுக் கொடுங்கள். அதோடு சேர்த்து கொஞ்சம் உண்மையையும், நேர்மையையும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுங்கள். ஆசிரியர்கள் நல்ல மாணவர்களை உருவாக்க வேண்டும். ஆசிரியர்களின் கரங்களில் தான் இந்த தேசத்தின் எதிர்காலம் இருக்கிறது.
என்னுடைய அடையாளம், கலாசாரம், மரபு, மொழி ஆகியவற்றை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று துடிப்புடன் இருக்கும் தமிழ் சமூகம் என்னுடைய சமூகம் என்று பெருமைப்படுகிறேன். சரியான வார்த்தைகள் மகத்தான சக்தியை உருவாக்கும் என்று சொல்வார்கள். நாங்கள் சரியான வார்த்தையை தேர்வு செய்து இருக்கிறோம். லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து என்கின்ற அந்த வார்த்தை மகத்தான சக்தி வாய்ந்த வார்த்தையாக தமிழ்ச் சமூகத்தில் உருவாகப் போகிறது.
இதை விளம்பரத்துக்காக செய்கிறீர்களாக என்று நினைக்கலாம். நேர்மை நிச்சயமாக விளம்பர யுக்தி அல்ல. வித்தியாசமானவர்கள் என்று காட்டிக் கொள்வதற்கான தன்மை இல்லை. நேர்மையான, உண்மையான ஒரு சமூகம் உருவாக, மாண்பும் மனிதநேயமும் உள்ள ஒரு சமூகம் உருவாக வேண்டும் என்பதற்கான அடித்தளமாக இந்த வாசகத்தை எல்லா இடங்களிலும் பயன்படுத்துகிறோம். நிச்சயமாக நேர்மையான, உண்மையான சமூகம் உருவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் மதுரை மாவட்ட நீதிபதி மதுசூதனன் உள்பட பலர் கலந்துகொண்டு, ஆசிரியர்கள், நேர்மையான அதிகாரிகள், டாக்டர்கள், எழுத்தாளர்கள், இளம் சாதனையாளர்கள ஆகியோருக்கும், சிறந்த சமூக சேவை அமைப்புகள், சிறந்த அரசு பள்ளிகளுக்கு விருதுகளை வழங்கி பாராட்டினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து, திண்ணை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.