கல்வராயன்மலை வனப்பகுதியில்: 3,300 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு - போலீசார் நடவடிக்கை
கல்வராயன்மலை வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரத்து 300 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி அழித்தனர்.
கச்சிராயப்பாளையம்,
கள்ளக்குறிச்சி அருகே அடர்ந்த வனப்பகுதியாக கல்வராயன்மலை அமைந்துள்ளது. இங்கு ஏராளமான நீர்வீழ்ச்சிகளும், நீரோடைகளும் உள்ளன. இந்த நீரோடைகளில் வரும் தண்ணீரை பயன்படுத்தி சிலர் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களுக்கு வாகனம் மூலம் கடத்திச்சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதை தடுக்க மாவட்ட காவல்துறையினர் சாராயவேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த சில நாட்களாக கல்வராயன்மலை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையின் காரணமாக நீரோடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் கல்வராயன்மலை வனப்பகுதியில் சிலர் சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார் சென்றது.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பூங்கோதை தலைமையிலான போலீசார் சேராப்பட்டு, தும்பராம்பட்டு, ஆணைமடுவு, ஆரம்பூண்டி உள்ளிட்ட வனப்பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தும்பராம்பட்டு வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக சின்டெக்ஸ் தொட்டிகள், பேரல்களில் 3 ஆயிரத்து 300 லிட்டர் சாராய ஊறல் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார், சாராய ஊறலை கைப்பற்றி, கீழே கொட்டி அழித்தனர். மேலும் இதுதொடர்பாக தும்பராம்பட்டு பகுதியை சேர்ந்த ராமன் மகன் செல்வராஜ், சிவலிங்கம் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.