கச்சிராயப்பாளையம் அருகே: ரத்தக்காயங்களுடன் மூதாட்டி பிணம் - கொலையா? போலீசார் விசாரணை
கச்சிராயப்பாளையம் அருகே ரத்தக்காயங்களுடன் மூதாட்டி பிணமாக கிடந்தார். அவரை யாரேனும் கொலை செய்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கச்சிராயப்பாளையம்,
கச்சிராயப்பாளையம் அருகே கல்வராயன்மலையில் உள்ள பன்னிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பிச்சன். இவருடைய மனைவி ராமாயி(வயது 63). நேற்று காலை 7 மணியளவில் ராமாயி அதே பகுதியில் உள்ள உறவினர் செல்லம்மாள் என்பவரது வீட்டுக்கு செல்வதாக தனது மகன் ஸ்ரீனிவாசனிடம் கூறிவிட்டு சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து ஸ்ரீனிவாசன், செல்லம்மாளின் வீட்டுக்கு சென்று கேட்டார். அப்போது ராமாயி அங்கு வரவில்லை என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரீனிவாசன் மற்றும் அவரது உறவினர்கள் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தனர். அப்போது பன்னிப்பாடி-முண்டியூர் செல்லும் சாலையில் ஒரு விவசாய நிலத்துக்கு அருகே தலையில் ரத்தக்காயங்களுடன் ராமாயி பிணமாக கிடந்தார்.
இதுபற்றி கரியாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர்கள் கிள்ளிவளவன், ரவிக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராமாயியின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து ஸ்ரீனிவாசன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராமாயியை யாரேனும் அடித்துக்கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.