‘இரும்பு’ போலீஸ்காரர்
நீச்சல், சைக்கிள் மிதித்தல், ஓட்டப்பந்தயம் ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய டிரையத்லான் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு ‘அயன் மேன்’ என்ற பட்டமும், பரிசும் வழங்கப்படுகிறது.
நீச்சல், சைக்கிள் மிதித்தல், ஓட்டப்பந்தயம் ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய டிரையத்லான் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு ‘அயன் மேன்’ என்ற பட்டமும், பரிசும் வழங்கப்படுகிறது. இந்த போட்டியில் பங்கேற்று ‘இரும்பு மனிதர்’ பட்டம் வென்ற இந்தியாவின் முதல் போலீஸ்காரர் என்ற சிறப்பை பெற்றிருக்கிறார், சங்கர் உதாலே.
39 வயதாகும் இவர் மும்பையை அடுத்த விரார் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 92 கிலோ எடை கொண்டிருந்தார். உடல் பருமன் பிரச்சினைக்கு தீர்வுகாண ஓட்டப்பந்தயம், சைக்கிள் மிதித்தல் போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டவர் பின்பு அது தொடர்பான மாரத்தான் போட்டிகளில் பங்கேற்க தொடங்கி இருக்கிறார். அது கொடுத்த உத்வேகத்தில் மலேசியாவில் நடந்த ‘அயன்மேன்’ போட்டியில் பங்கேற்று வெற்றிவாகை சூடிவிட்டார். அங்கு பந்தய தூரத்தை 17 மணி நேரத்தில் நிறைவு செய்ய வேண்டும். சங்கரோ நீச்சல் (3.8 கிலோ மீட்டர்), சைக்கிளிங் (108.2 கிலோ மீட்டர்), ஓட்டப்பந்தயம் (42.2 கி.மீ) என இடைவெளி இல்லாமல் 16 மணி நேரம் 15 நிமிடங்களுக்குள் பந்தய தூரத்தை கடந்து அசத்திவிட்டார். காலையில் 7 மணிக்கு தொடங்கிய போட்டி நள்ளிரவு வரை நீடித்திருக்கிறது.
‘‘உடல் எடையை குறைப்பதற்காக காலையில் எழுந்ததும் ஓடத்தொடங்கினேன். அது பழகிப்போனதால் மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றேன். அப்போது அயன்மேன் போட்டி பற்றி கேள்விப்பட்டேன். அதற்கு தயாராகுவதற்காக மழையில் நனைந்தபடி சைக்கிளிங் பயிற்சி மேற்கொண்டேன். நீச்சல் பயிற்சி பெற்றபோது போட்டி சார்ந்த நுணுக்கங்களை கற்றுக்கொண்டேன்’’ என்கிறார்.
உடல் எடையை சீராக பராமரிப்பதற்கு சங்கர் உணவு விஷயத்திலும் கூடுதல் கவனம் செலுத்துகிறார். அவர் பணிக்கு செல்லும்போது அவருடைய மனைவி அஸ்வினி வேகவைத்த உணவு வகைகள், சாலட்டுகளைதான் அதிகமாக கொடுத்து அனுப்புகிறார்.
‘‘உடல் நலத்தை பேணுவதற்கு தினமும் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். அது உடல் மட்டுமல்ல மனநிலையையும் மேம்படுத்தும். அதன் மூலம் பார்க்கும் வேலையையும் சிறப்பாக செய்ய முடியும்’’ என்கிறார், சங்கர்.
ஏற்கனவே ‘அயன்மேன்’ பட்டம் வென்ற முதல் ஐ.பி.எஸ்., அதிகாரி என்ற சிறப்பை கிருஷ்ண பிரகாஷ் கடந்த ஆண்டு பெற்றார்.