எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோரை ஒதுக்கக்கூடாது; கலெக்டர் நடராஜன் பேச்சு

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோரை ஒதுக்கக்கூடாது என்று கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.

Update: 2018-12-01 22:25 GMT

மதுரை,

மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ–மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியினை கலெக்டர் நடராஜன், கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் கலந்துகொண்டவர்கள், எய்ட்ஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணியானது மதுரை மருத்துவக்கல்லூரியில் முடிவடைந்தது. பின்னர் மதுரை மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் கலெக்டர் நடராஜன் பேசியதாவது:–

எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான உலக எய்ட்ஸ் தின மையக்கருத்து ‘உங்களின் நிலை தெரிந்துகொள்ளுதல்’ என்பதாகும். மதுரை மாவட்டத்தில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட 194 பேருக்கு 2017–18–ம் கல்வி ஆண்டில் முதல்–அமைச்சரின் சிறப்பு நிதியிலிருந்து கல்வி உதவித்தொகையாக ரூ.4.51 லட்சமும், 138 பேருக்கு உழவர் பாதுகாப்பு திட்டம் மூலம் ரூ.1000–ம், 244 பேருக்கு விதவை மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1000–ம், 31 பேருக்கு மாதாந்திர முதியோர் ஓய்வூதியமாக ரூ.1000–ம், 3,022 பேருக்கு கட்டணமில்லா பஸ் பயண அட்டைகளும், 14 பேருக்கு இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம் மூலம் வீடுகளும், 7 பேருக்கு பசுமை வீடுகளும், 34 பேருக்கு இலவச தையல் எந்திரமும், 73 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களும் வழங்கப்பட்டுள்ளது.

மாதந்தோறும் சுமார் 3 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டு இலவச பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. எச்.ஐ.வி. தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நபர்களுக்கு பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு அரசின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபர்களை சமுதாயத்தில் இருந்து ஒதுக்காமல் அவர்களும் மனிதர்கள் தான் என்பதை மனதில் வைத்துக்கொண்டு சகஜமாக பழக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர், அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள ஆய்வகத்திற்கு புதிதாக வந்துள்ள மருத்துவ பரிசோதனை எந்திரத்தையும், டெங்கு பரிசோதனை ஆய்வகத்தையும் பார்வையிட்டார்.

மேலும் செய்திகள்