மக்கள் நல போராட்டக்குழுவினர் ஆர்ப்பாட்டம்

இரு மதத்தினருக்கு இடையே உள்ள பிரச்சினையை தீர்க்க கோரியும், அவர்களுக்கிடையே சமூக நல்லிணக்கத்தை உருவாக்கிட மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியும் தர்ணா போராட்டம் நடத்தப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

Update: 2018-12-01 22:30 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் இரு மதத்தினருக்கு இடையே உள்ள பிரச்சினையை தீர்க்க கோரியும், அவர்களுக்கிடையே சமூக நல்லிணக்கத்தை உருவாக்கிட மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியும் பெரம்பலூர் மாவட்ட மக்கள் நல போராடக்குழு சார்பில் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் தர்ணா போராட்டம் நடத்தப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தர்ணா போராட்டத்திற்கு பெரம்பலூர் போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் நேற்று பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து போராட்டம் நடத்த வந்த மக்கள் நல போராட்டக்குழுவிடம் போலீசார் தர்ணா நடத்த அனுமதியில்லை. மீறி நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என்று போராட்டக்காரர்களை போலீசார் எச்சரித்தனர். பின்னர் போராட்டக்காரர்கள் தர்ணா போராட்டம் நடத்தாமல் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சின்னதுரை, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாநில செயலாளர் முகைதீன்அப்துல்காதர் ஆகியோர் பேசினர். வி.களத்தூரில் இரு மதத்தினருக்கிடையே சமூக நல்லிணக்கத்தை உருவாக்கிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் உள்பட அப்பாவிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்பதனை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஞானசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில விவசாய அணி செயலாளர் செங்கோலன், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளரும், மூத்த வக்கீலுமான காமராஜூ, நாம் தமிழர் கட்சியின் மாவட்ட தலைவர் அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்