திருமானூரில் தார்ச்சாலை அமைக்க கோரி நாற்று நடும் போராட்டம்

திருமானூரில் தார்ச்சாலை அமைக்க கோரி நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.

Update: 2018-12-01 22:45 GMT
கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் கிராமத்தில் உள்ள காலனி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் தார்ச்சாலைகள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது தார்ச்சாலைகள் மண் சாலையாக மாறியுள்ளன. மேலும் மழை காலங்களில் கழிவுநீர் செல்லும் வகையில் வடிகால் வசதி இல்லை. இதனால் மழை காலங்களில் கழிவுநீர் சாலைகளில் செல்வதால் மண் சாலையில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

வடிகால் வசதி இல்லாததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழைநீர் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ளதால் அதில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே காலனி பகுதிகளில் உள்ள மண் சாலைகளை தார்ச்சாலையாக மாற்றி, கழிவுநீர் வடிகால் வாய்க்கால் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கடந்த சில நாட்களாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர்.

ஆனால் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று திருமானூரில் தார்ச்சாலை, வடிகால் வாய்க்கால் அமைக்க கோரி மண் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இன்றும் (நேற்று) கோரிக்கை மனு அளிப்போம். காலனி பகுதிகளில் உள்ள மண் சாலைகளை, தார்ச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்ததாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்