ஈரோட்டில், சுத்திகரிக்காமல் கழிவுநீரை வெளியேற்றிய 3 தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு; மீண்டும் செயல்படக்கூடாது என பொதுமக்கள் வலியுறுத்தல்
ஈரோட்டில் சுத்திகரிக்காமல் கழிவுநீரை வெளியேற்றிய 3 தொழிற்சாலைகளின் மின் இணைப்பை துண்டித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் மீண்டும் செயல்படக்கூடாது என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஈரோடு,
ஈரோடு சூரம்பட்டி மற்றும் சுப்ரமணியம்நகர் பகுதிகளில் செயல்பட்டு வரும் சாய –சலவை, அச்சு தொழிற்சாலைகள் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் நீர்நிலைகளில் விடுவதாக மாவட்ட கலெக்டர் சி.கதிரவனுக்கு புகார் வந்தது. அதைத்தொடர்ந்து அவர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன் பேரில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கடந்த 4 நாட்களாக மேற்கண்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு சாயம், ஒரு சலவை மற்றும் ஒரு அச்சு தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வெளியேற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட 3 தொழிற்சாலைகளின் மின் இணைப்புகளையும் அதிகாரிகள் துண்டித்தனர்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, ‘மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அவ்வப்போது வந்து ஆய்வு நடத்துகிறார்கள். அப்போது ஒரு சில தொழிற்சாலைகளின் மின் இணைப்புகளை துண்டித்து நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆனால் எங்கள் பகுதியில் உள்ள ஏராளமான தொழிற்சாலைகளில் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதே இல்லை.
மேலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட தொழிற்சாலைகள் ஒரு சில மாதங்களில் செயல்பட தொடங்கி விடுகிறது. எனவே சுத்திகரிப்பு செய்யாமல் கழிவுநீரை நீர்நிலைகளில் வெளியேற்றும் தொழிற்சாலைகளை நிரந்தரமாக மூடவும், மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட தொழிற்சாலைகள் மீண்டும் செயல்படாமல் இருக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.