பந்தலூரில் இடிந்து விழும் நிலையில் மருத்துவ பணியாளர் குடியிருப்புகள்

பந்தலூரில் மருத்துவ பணியாளர் குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

Update: 2018-12-01 22:30 GMT

பந்தலூர்,

பந்தலூர் தாலுகாவில் நெலாக்கோட்டை, சேரங்கோடு ஊராட்சிகள் உள்பட நூற்றுக்கணக்கான குக்கிராமங்கள் உள்ளன. சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் தோட்ட தொழிலாளர்கள் ஆவர். இந்த நிலையில் பொதுமக்கள், தோட்ட தொழிலாளர்கள் மருத்துவ சேவை பெறுவதற்காக பந்தலூரில் தாலுகா தலைமை அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இங்கு டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் குடும்பத்தினருடன் தங்கி பணியாற்றுவதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு கான்கிரீட் குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்பட்டது. இதனால் மருத்துவர்கள், நர்சுகள் தங்கள் குடும்பத்தினருடன் தங்கி வசித்து வந்தனர்.

ஆனால் ஆண்டுகள் பல கடந்தும் பழுதான குடியிருப்பு கட்டிடங்களில் இதுவரை சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கட்டிட சுவர்கள் மற்றும் மேற்கூரைகளில் விரிசல் விழுந்து, மழைக்காலத்தில் தண்ணீர் உள்ளே வழிந்தோடுகிறது. இதனால் மருத்துவ பணியாளர்கள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் மழைநீர் ஒழுகாத வகையில் மேற்கூரைகளில் பிளாஸ்டிக் போர்வைகளை போட்டு வைத்துள்ளனர். இதேபோன்று ஓடுகளால் மேற்கூரைகள் வேயப்பட்ட வீடுகளும் உடைந்து காணப்படுகிறது.

இதனால் பழுதடைந்த குடியிருப்புகள் மற்றும் வீடுகளில் தங்க முடியாமல் டாக்டர்கள் வாடகை வீடுகளுக்கு இடம் பெயர்ந்தனர். ஆனால் நர்சுகளும், மருத்துவ பணியாளர்களும் மோசமான குடியிருப்புகளில் தொடர்ந்து தங்கி வருகின்றனர். எனவே பழுதடைந்த வீடுகளை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எந்த நேரத்திலும் குடியிருப்புகள் இடிந்து விழும் அபாயத்தில் மருத்துவ பணியாளர்கள் வசித்து வருகின்றனர்.

இந்த அவல நிலையை போக்க மருத்துவ பணியாளர்களுக்கு பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிய குடியிருப்புகள் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:–

பந்தலூரில் அரசு ஊழியர்கள், டாக்டர்கள், நர்சுகள் தங்கி பணியாற்ற விரும்புவது இல்லை. இதனால் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. தற்போது பணியில் உள்ள டாக்டர், நர்சுகள் தங்கும் குடியிருப்புகள் மோசமாக உள்ளது. இதனால் கடும் சிரமத்துக்கு இடையே பணியாற்றி வருகின்றனர். எனவே புதிய குடியிருப்புகள் கட்டி கொடுக்க சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்