மேகதாதுவில் அணை கட்டினால் பா.ஜனதா கடுமையாக எதிர்க்கும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

மேகதாதுவில் அணை கட்டினால் அதை பா.ஜனதா கட்சி கடுமையாக எதிர்க்கும் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Update: 2018-12-01 23:15 GMT
திருப்பூர்,

பா.ஜனதா கட்சியின் கோவை பெருங்கோட்டத்திற்குட்பட்ட மண்டல தலைவர்களுக்கான பயிற்சி முகாம் பெருமாநல்லூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் கஜா புயலினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தொடர்ந்து பொதுமக்களுக்கு உதவி செய்வதை விட்டுவிட்டு பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்வதையே சில கட்சிகள் வேலையாக கொண்டிருக்கின்றன. பிரதமரின் பிரதிநிதியாகவே மத்திய மந்திரிகள் வந்து பார்வையிட்டு சென்றுள்ளனர். இதன் மூலமே பல நிவாரண பொருட்கள் கிடைத்ததுடன், நிவாரண பணிகளும் நடைபெற்று வருகிறது. நிவாரண பணிகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

மேகதாது அணை பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 4-ந்தேதி திருச்சியில் போராட்டம் நடத்துவதாக எதிர்க்கட்சிகள் சார்பில் விடுத்துள்ள அறிவிப்பு தேவையற்றது. இந்த பிரச்சினையில் தமிழக அரசு சட்ட ரீதியாக நீதிமன்றம் மூலம் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் அரசியல் சுயலாபத்திற்காக போராட்டம் நடத்துவதை ஏற்று கொள்ள முடியாது. இதுபோல் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் முன்வைத்துள்ள கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்ய வேண்டும். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததை தொடர்ந்து அவர்கள் மறுபடியும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர். எனவே ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்தை தள்ளி வைக்க வேண்டும்.

இந்த போராட்டங்களால், மக்களுக்கான துயரங்கள் மறைக்கப்பட்டு விடும். டெல்லியில் சிலர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஆனால் விவசாயிகளுக்கு பிரதமர் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். மத்திய அரசின் பயிர்பாதுகாப்பு திட்டத்தில் தமிழக விவசாயிகள் தான் அதிக பயன்பெற்றுள்ளனர். உண்மையான விவசாயிகள் தங்கள் பணிகளை பார்த்து கொண்டிருக்கும் நேரத்தில், விவசாயிகள் என்ற போர்வையில் அரை நிர்வாணமாக சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் இந்த ஆட்சியில் பாதுகாப்பாக இருக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். அந்த ஆட்சியில் எந்த வளர்ச்சி திட்டங்களும் நடைபெறவில்லை.

தற்போதைய ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தொடர்ந்து எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர். மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கான ஆய்வு மட்டுமே செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்ட முடியாது. மேகதாதுவில் அணை கட்டினால் அதை பா.ஜனதா கட்சி கடுமையாக எதிர்க்கும். காவிரி பிரச்சினையை பல ஆண்டு நீட்டி கொண்டிருந்ததை முடிவுக்கு கொண்டுவந்தது பா.ஜனதா அரசு தான். விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஆனால் விவசாயிகளை கண்டுகொள்ளாத அரசு என தி.மு.க.விமர்சித்து வருவதை ஏற்று கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்