சேலத்தில் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் ரூ.16.30 லட்சம் முறைகேடு பெண் ஊழியர் மீது வழக்கு
சேலத்தில் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் ரூ.16.30 லட்சம் முறைகேடு செய்ததாக பெண் ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்,
சேலம் ராமகிருஷ்ணா ரோடு பகுதியை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன். இவருடைய மகன் சாய்ராம். இவர், அந்த பகுதியில் நீட், ஐ.ஐ.டி., ஜே.இ.இ.டி ஆகியவற்றுக்கான பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இந்த மையத்தில் சேலத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இங்கு பிரியா என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர், பயிற்சி மையத்தில் படிக்கும் 39 மாணவ-மாணவிகளிடம் கட்டணமாக ரூ.16 லட்சத்து 30 ஆயிரத்து 500-ஐ வசூலித்துள்ளார். ஆனால் அந்த பணத்தை மைய உரிமையாளரான சாய்ராமிடம் கொடுக்காமல் சொந்த செலவுக்கு பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் நீட் தேர்வு பயிற்சி மையத்தின் உரிமையாளர் சாய்ராம் புகார் செய்தார். அதில், நீட் மையத்தில் படிக்கும் 39 மாணவர் களிடம் ஊழியர் பிரியா என்பவர் ரூ.16 லட்சத்து 30 ஆயிரத்து 500 வசூலித்து கொண்டு தனது சொந்த செலவுக்கு பயன்படுத்தி வருகிறார். எனவே, அவரிடம் உரிய விசாரணை நடத்தி முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுப்பதோடு, அவரிடம் இருந்து அந்த பணத்தை பெற்றுத்தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து நீட் தேர்வு மையத்தில் ரூ.16.30 லட்சம் முறைகேடு செய்ததாக பிரியா மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.