விழுப்புரத்தில் போலீஸ் உபகரணங்களை டி.ஐ.ஜி. ஆய்வு

விழுப்புரத்தில் போலீஸ் உபகரணங்களை டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் ஆய்வு செய்தார்.

Update: 2018-12-01 23:00 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் பணியாற்றி வரும் போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள உபகரணங்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பயன்படுத்தி வரும் வாகனங்களை நேற்று மாலை விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பயன்படுத்தி வரும் இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்களை பார்வையிட்டு அதன் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்தார். அப்போது வாகனங்களில் சிறு, சிறு பழுதுகள் இருப்பதை அறிந்த அவர் உடனே அந்த பழுதுகளை சரிசெய்யும்படி அறிவுறுத்தினார்.

அதை தொடர்ந்து போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள சீருடைகள், மழைகோட், லத்தி, துப்பாக்கி மற்றும் பாதுகாப்பு கவசங்களை முறையாக பராமரிக்கிறார்களா? என்று டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் பார்வையிட்டார்.

அதன் பிறகு நடந்த ஆயுதப்படை போலீசாரின் அணி வகுப்பு மரியாதையையும், கலவரம் நேர்ந்தால் அந்த பகுதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, எவ்வாறு மக்களை பாதுகாப்பது என்பது குறித்து நடந்த செயல்விளக்கத்தையும் அவர் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைச்சாமி, ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் நெடுஞ்செழியன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்