ரகசிய அறை அமைத்து காரில் மதுபாட்டில்கள் கடத்தல் டிரைவர் கைது; 2 பேருக்கு வலைவீச்சு

காரில் ரகசிய அறைகள் அமைத்து அதில் மறைத்து வைத்து மதுபாட்டில்கள் கடத்திய கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2018-12-01 22:30 GMT
கோட்டக்குப்பம், 

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார், அனுமந்தை சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக புதுச்சேரியில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தும்படி போலீசார் சைகை காட்டினர். ஆனால் டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார்.

அதைத் தொடர்ந்து அந்த காரை போலீசார் தங்களுடைய ஜீப்பில் விரட்டிச் சென்றனர். சிறிது தூரம் சென்றதும் போலீசார் துரத்தி வருவதை அறிந்ததும் அந்த காரை டிரைவர் நிறுத்தினார். தொடர்ந்து காரில் இருந்து இறங்கிய 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கார் டிரைவர் மட்டும் போலீசாரிடம் சிக்கிக்கொண்டார்.

பின்னர் போலீசார் அந்த காரை சோதனை செய்தனர். அதில் அந்த காரில் ரகசிய அறைகள் அமைத்து பெட்டி, பெட்டியாக மதுபாட்டில்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 345 குவார்ட்டர் அளவு மதுபாட்டில்கள் இருந்தன. இதுகுறித்து கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள சூரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் (வயது 45) என்பதும், புதுச்சேரியில் மதுபாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பதற்காக சேலத்துக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து முருகேசனை போலீசார் கைது செய்தனர். மதுபாட்டில்கள், அவற்றை கடத்த பயன்படுத்திய கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்