வேடசந்தூர் அருகே சோகம்: கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி சாவு ஒரே இடத்தில் உடல்கள் அடக்கம்
வேடசந்தூர் அருகே கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் இறந்தார். இருவரது உடல்களும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
வேடசந்தூர்,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கன்னடம்பட்டியை சேர்ந்தவர் பெருமாள்சாமி (வயது 76). விவசாயி. அவருடைய மனைவி பாப்பம்மாள் (70). இவர்களுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இவர்கள் திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்தநிலையில் பெருமாள்சாமியும், பாப்பம்மாளும் தனது இளைய மகன் சக்திவேல் வீட்டில் வசித்து வந்தனர். இந்தநிலையில் பெருமாள்சாமிக்கு கடந்த 10 நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவர் படுத்த படுக்கையாக இருந்தார். இதையடுத்து பாப்பம்மாள் அவரை கவனித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் பெருமாள்சாமி இறந்தார்.
கணவர் இறந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் பாப்பம்மாள் மனமுடைந்து காணப்பட்டார். இரவு முழுவதும் அழுது கொண்டே இருந்ததால் சோர்வாக காணப்பட்டார். நேற்று காலை பெருமாள்சாமிக்கு இறுதி சடங்குகள் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன. அப்போது பாப்பம்மாள் திடீரென மயங்கி விழுந்தார்.
இதனால் பதறிப்போன உறவினர்கள், அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து பார்த்தனர். ஆனால் அது பலனளிக்கவில்லை. அவரது கையை பிடித்து நாடித்துடிப்பு பார்த்தபோது, பாப்பம்மாள் இறந்தது தெரியவந்தது. கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் இறந்த சம்பவம் உறவினர்களை மேலும் சோகத்தில் மூழ்கடித்தது. இதையடுத்து இருவரின் உடல்களும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன. வயதான தம்பதியினர் சாவிலும் இணை பிரியாமல் இறந்தது அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.