ராசிபுரம் அருகே சோகம்: தந்தை இறந்த துக்கத்தில் மகள் சாவு

ராசிபுரம் அருகே தந்தை இறந்த துக்கத்தில் மகளும் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Update: 2018-12-01 22:30 GMT
ராசிபுரம், 

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள கூனவேலம்பட்டி புதூர் முத்துவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் துளசிராமன் (வயது 71). இவரது மனைவி ஜானகி (65). இவர்களுக்கு மகாராஜன் (32) என்ற மகனும், விஜயா (45), அம்பாயி (35) என்ற 2 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. துளசிராமன் விசைத்தறி தொழிலில் ரீலிங் (கோன் பூட்டு அடிப்பது) தொழில் செய்து வந்தார். மேலும் கூனவேலம்பட்டி புதூர் 4-வது வார்டு தி.மு.க. அவைத் தலைவராகவும் இருந்து வந்தார்.

இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதற்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் துளசிராமனுக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இதைக்கண்டு அவரது மனைவி ஜானகி, மகள் அம்பாயி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் அவரது இன்னொரு மகள் விஜயாவும் விரைந்து வந்தார்.

இந்த நிலையில் இறந்த துளசிராமனுக்கு தேங்காய், பழம், ஊதுபத்தி வைத்து இறுதி சடங்கு செய்ய தயாரானார்கள். அப்போது அம்பாயி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். தந்தை இறந்த ½ மணி நேரத்திற்குள் மகள் அம்பாயியும் உயிரிழந்தது அவர்களுடைய குடும்பத்தினர், உறவினர்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. தந்தை, மகள் இருவரின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். துளசிராமன் மற்றும் அம்பாயி ஆகியோர் இறந்த சம்பவத்தை பற்றி கேள்விப்பட்டதும் கூனவேலம்பட்டி புதூர், தோணமேடு, குருசாமிபாளையத்தை சேர்ந்த உறவினர்கள், நண்பர்கள் பலர் திரண்டு வந்து அவர்களது உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் இருவரின் உடல்களும் நேற்று மாலையில் அடக்கம் செய்யப்பட்டது. தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மகளும் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்