குப்பம் கிராமத்தில்: காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

கண்ணமங்கலம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-01 22:45 GMT

கண்ணமங்கலம்,

கண்ணமங்கலம் அருகே உள்ள குப்பம் கிராமத்தில் வாணியத்தெரு, மேலத்தெரு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஊராட்சி மூலம் குடிநீர் வினியோகம் சரிவர செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனை கண்டித்து நேற்று காலை அந்த பகுதி சுமார் 25–க்கும் மேற்பட்டோர் படவேட்டில் இருந்து கண்ணமங்கலம் செல்லும் சாலையில் காலிக் குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இது குறித்து ஊராட்சி செயலர் (பொறுப்பு) முருகன் கூறுகையில், ‘‘வாணியத்தெரு பகுதியில் சுமார் 20–க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் வழங்குவதற்காக பதிக்கப்பட்ட ராட்சத குழாயிலிருந்து நேரடியாக மின் மோட்டார் மூலம் குடிநீர் எடுப்பதால் இது போன்ற நிலை உள்ளது.

எனவே இது சம்பந்தமாக போளூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தெரிவித்து மின் மோட்டார்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அப்பகுதியில் சில இடங்களில் கூடுதல் குழாய் அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்’’ என்றார். இந்த மறியல் போராட்டம் காரணமாக சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்