மேகதாது அணை பிரச்சினை: சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும்; அ.தி.மு.க., தி.மு.க. வலியுறுத்தல்

மேகதாது அணை கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசை திரும்பப்பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2018-11-30 23:58 GMT

புதுச்சேரி,

புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:–

கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளித்து இருப்பதை மத்திய அரசை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வர சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்ட அ.தி.மு.க. சார்பில் சபாநாயகருக்கு கடிதம் கொடுத்துள்ளோம். கர்நாடக அரசு அங்கு அணை கட்டினால் ஒட்டுமொத்தமாக தமிழகம், காரைக்கால் பாதிக்கப்படும்.

கர்நாடகத்தில் காங்கிரஸ், பாரதீய ஜனதா என எந்த கட்சி ஆட்சி செய்தாலும் காவிரி நடுவர் மன்றம், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை மதிப்பதில்லை. ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் காங்கிரசும், பாரதீய ஜனதாவும் துரோகம் இழைத்து வருகின்றன. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது காவிரி பிரச்சினையில் எந்த நடவடிக்கையும் எடுத்து இல்லை. இப்போது போராடுவதாக கூறுவது நாடகம்.

தமிழகத்தில் சிறப்பு சட்டமன்றத்தை கூட்ட வலியுறுத்தியுள்ள தி.மு.க. புதுவை மாநிலத்தில் ஏன் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வலியுறுத்தவில்லை. மேகதாதுவில் அணைகட்ட கடந்த 2012–ம் ஆண்டு வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதை உறுதியோடு எதிர்த்த ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் தமிழக உரிமை சம்பந்தமாக வழக்கு தொடுத்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அன்பழகன் எம்.எல்.ஏ. கூறியதாவது:–

கவர்னர் கிரண்பெடிக்கும், முதல்–அமைச்சர் நாராயணசாமிக்கும் கடும் பனிப்போர் நடந்து வருகிறது. முன்பு அரசுப் பள்ளிகளில் 1½ லட்சம் பேர் படித்தனர். ஆனால் அது தற்போது 75 ஆயிரமாக குறைந்துள்ளது. மாணவர்கள் அனைவருக்கும் கல்வி அளிக்க அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு கடந்த 30 ஆண்டுக்கும் மேலாக நிதியுதவி அளித்து வருகிறது. ஆனால் கடந்த 4 மாதமாக உரிய நிதியை அரசு அளிக்கவில்லை. பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை கவர்னர் வழங்க மறுப்பதாக முதல்–அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கூடங்களை நடத்தும் சிறுபான்மையினருக்கு எதிராக நடவடிக்கையில் ஈடுபடும் செயலாக இது உள்ளது. இதில் முதல்–அமைச்சர் நாராயணசாமி உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் இது மிகப்பெரிய தவறில் முடியும். கல்வி தொடர்பான வி‌ஷயத்தில் நிதி தர மறுப்பது மிகப்பெரிய துரோகம். பட்ஜெட் ஒதுக்கப்பட்ட நிதியை அவர்களுக்கு வழங்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சபாநாயகரிடம் தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. கொடுத்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:–

கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது அடாவடித்தனமான செயல். மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழகம் மட்டுமின்றி காவிரியின் கடைமடை பகுதியான காரைக்காலுக்கும் உரிய நீர் கிடைக்காத நிலை ஏற்படும்.

தமிழகம் மற்றும் காரைக்கால் விவசாயிகள் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் இந்த நேரத்தில் மத்திய அரசு இதுபோன்ற அனுமதி அளித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் உள்ளது. ஆகவே சட்டத்திற்கு விரோதமாக மேகதாதுவில் அணை கட்டும் வரைவு அறிக்கைக்கு அளிக்கப்பட்ட மத்திய அரசின் அனுமதியை திரும்பப்பெற மத்திய வலியுறுத்தி சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் இயற்ற சட்டமன்ற கூட்டத்தொடரை உடனடியாக கூட்ட தாங்கள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்