கஜா புயல் பாதிப்பு: அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதாக இல்லை - ஒரத்தநாட்டில், கமல்ஹாசன் பேட்டி
கஜா புயல் பாதிப்புக்கு தமிழக அரசு வழங்கியுள்ள நிதி போதுமானதாக இல்லை என்று ஒரத்தநாட்டில் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
ஒரத்தநாடு,
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று பார்வையிட்டார். ஒரத்தநாட்டை அடுத்துள்ள வெள்ளூர் கிராமத்தில் சாய்ந்து கிடக்கும் தென்னை மரங்களை பார்வையிட்டு சம்மந்தப்பட்ட விவசாயிடம் இந்த மரங்கள் எத்தனை ஆண்டுகள் பலன் தந்தது என கேட்டார்.
அதற்கு அந்த விவசாயி, இந்த மரங்கள் 25 ஆண்டுகள் எனது குடும்பத்துக்கு வாழ்வாதாரமாக இருந்தது. இனி வருங்காலத்தில் வருமானத்துக்கு என்ன செய்யப்போகிறேனோ? தெரியவில்லை என வேதனையுடன் கூறினார். இதைக்கேட்ட கமல்ஹாசன் கண் கலங்கினார். மேலும் அந்த பகுதியில் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட் களையும் வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர் களிடம் கூறியதாவது:-
புயலின் வேகத்துக்கு இணையாக அரசின் செயல்பாடுகளில் வேகம் இல்லை. செல்லும் வழியில் எனக்கு வழிவிட்ட மக்கள் அரசு மீது கோபப்பட்டனர். அரசு அதிகாரிகள் யாரும் எங்களை வந்து பார்க்கவில்லை, எந்த உதவியும் செய்யவில்லை என புகார் கூறுகிறார்கள். வசதியாக இருந்த குடும்பத்தினர் ஒரே இரவில் ஏழையாகி விட்டனர்.
இது குறித்து எனது நண்பர்களான நடிகர்கள் அமிதாப்பச்சன், அமீர்கான் ஆகியோரிடம் கூறி உள்ளேன். அவர்கள் இந்த புயல் பாதிப்பை பேரிடராக அறிவிக்க மத்திய அரசிடம் வலியுறுத்துவார்கள். ஆட்சியில் இருப்பவர்கள், இந்த புயல் பாதிப்பை வைத்து அரசியல் செய்கிறார்கள். மக்களுக்கு எல்லாவற்றையும் கொடுத்து விட்டோம் என சொல் கிறார்கள். அரசு அறிவித்து இருக்கும் நிவாரண தொகை போதுமானதாக இல்லை. பாதிக்கப்பட்ட மக்களை அன்புடன் அணுக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.